சாய்ந்தமருதின் ஏமாற்றமும் கல்முனையின் நியாயமும் ( வக்கற்ற சமூகத்தின் கதை )

ரோம் நகரம் எரிந்தபோது நீரோ மன்னன் ஆயாசமாக உட்கார்ந்து கொண்டு பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். மிதுலா நகரம் தீப்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் ஜனக மகாராஜா தன் அரண்மனையில் அமர்ந்து வேதாந்தம் படித்துக் கொண்டிருந்தாராம். சாந்தமருதுக்கான உள்ள10ராட்சி சபை விவகாரத்தால் கல்முனைக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையில் பெரும் முறுகல்நிலை ஏற்பட்டிருந்த வேளையில், அதற்கு தீர்வுகாணாமல் ஒளிந்து கொண்ட எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமய அமைப்புக்களும் பொறுப்புவாய்ந்தவர்களும் நீரோவையும் ஜனக மகாராஜாவையுமே ஞாபகப்படுத்துகின்றனர்.

 

இலங்கையில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்துகொண்டிருந்த போது சர்வதேசம் செய்ததும், முஸ்லிம்கள் மீது பௌத்த பேரினவாதம் மத ஒடுக்குமுறையை பிரயோகித்த போது அரசாங்கமும் மேற்குலகும் செய்ததும், முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்படும் போது காலகாலமாக முஸ்லிம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் செய்து கொண்டிருப்பதும் இதனையொத்த வேலைதான்.

 

சாய்ந்தமருது கல்முனை விவகாரத்தில் யாரும் பிடில்வாசிக்கவில்லை என்றாலும், வேதாந்தம் படிக்கவில்லை என்றாலும், இவ்விரு ஊர்களுக்கும் இடையில் சமரசத்;தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்காமல், இருதரப்பையும் ஒரு மேசையில் அமரவைத்து பேசித் தீர்வுகாணச் செய்யாமல் ஒரு பெரிய விவகாரமாக இது உருப்பெருக்க விட்டவர்கள் – இப்பகுதி அரசியல்வாதிகளும் முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அவர்களின் வலது கைகளும்தான்.
கடைசியில் மிஞ்சியது

 

இதில், மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம், ம.கா.தலைவர் றிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் ஹரீஸ் மட்டுமன்றி இப்பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இச்சந்தர்ப்பத்தில் காணாமல் போய்விட்ட பிரதியமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் உட்பட எல்லா எம்.பி.க்கள் (முன்னாள்) மாகாண சபை உறுப்பினர்களும் பாரிய தவறிழைத்திருக்கின்றார்கள்.

 

அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஞானசார தேரரோடு சமரசம் செய்ய முயற்சிக்கின்ற சிவில் அமைப்புக்களோ அல்லது ஜம்மியத்துல் உலமா சபையோ கல்முனைக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையில் அமைதியை நிலைநாட்ட முன்வந்தமாதிரி தெரியவில்லை. மேற்சொன்ன எல்லா தரப்பினரும் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக ஏதாவது நடக்கின்றதா? குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாமா? என்றுதான் பார்த்துக் கொண்டார்கள்.
இத்தனை போராட்டங்கள், கடையடைப்புக்கள், பேரணிகள் நடத்திய பிறகும் நடந்தது என்ன? சொல்லிக் கொள்ளும்படி எதுவும் கிடைக்கவில்லை. சாய்ந்தமருது மக்கள் நியாயபூர்வமாக வேண்டிநின்ற தனி உள்ள10ராட்சி சபையும் கிடைக்கவில்லை. கல்முனை மக்கள் முன்வைத்த நான்கு உள்ள10ராட்சி மன்றங்களாக பிரிக்கும் யோசனையும் நிறைவேற்றப்படவில்லை. கடைசியில், கடைகளை மூடி எதிர்ப்புத் தெரிவித்ததும், இரு சகோதர ஊர்களும் வாதப் பிரதிவாதங்களை நடாத்தி பகைமைபாராட்டிக் கொண்டதும், பிரகடனம் செய்ததும், உருவபொம்மை எரித்ததும்தான் மிச்சம் என்றாகிவிட்டது.

 

வக்கற்ற அரசியல்வாதிகள்

இந்த விடயத்தில் சாய்ந்தமருது மக்களே மிக அதிகமாக நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். கல்முனை மக்கள் பேய்க்காட்டப்பட்டிருக்கின்றார்கள். 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், அதில் றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் என இரு முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இருந்தும், அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் காலுக்குள்ளும் கைக்குள்ளும் கிடந்தும் ஒரு உள்ள10ராட்சி மன்றக் கோரிக்கையைக் கூட நிறைவேற்ற வக்கற்ற சமூகமாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் என்பதை விட கைசேதமும் கேடுகெட்ட நிலையும் வேறெதும் உண்டா?

 

சாய்ந்தமருது பிரதேசத்தின் நீண்டகால கோரிக்கையின் நியாயத் தன்மையை கல்முனை மக்களுக்கு புரிய வைத்து அரசாங்கத்திற்கு உயர்ந்தபட்ச அழுத்தத்தை கொடுத்து, உள்ள10ராட்சி மன்றத்தை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகளுக்கும் ஏனைய அரசியல்வாதிகளும் முடியாமல் போயிருக்கின்றது. அல்லது, கல்முனை மக்கள் அதற்கெதிராக கூறும் காரணங்களை சாய்ந்தமருது மக்களுக்கு தெளிவுபடுத்தி அவ்வூர் மக்களை பொறுமைகாக்கச் செய்வதற்கு அவர்களுக்கு இயலவில்லை. அதுவுமில்லாவிட்டால், நான்கு சபைகளாக பிரிப்பதற்கான ஏற்பாட்டை செய்வதற்கும் பலமில்லை. முஸ்லிம் அரசியலின் இப்படியான வக்கற்ற நிலைமையின் பலனாக இன்று இரு ஊர்கள் அரசியல் அடிப்படையில் மனமுடைவை சந்தித்திருக்கின்றன.

 

சகோதர ஊர்கள்

கல்முனையும் சாய்ந்தமருதும் ஒன்றிலிருந்து ஒன்று எவ்வகையிலும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் போன்ற பிரதேசங்களாகும்;. 1987இல் கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்ட போது கல்முனை பட்டின சபையுடன், கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு, கரைவாகு தெற்கு (சாய்ந்தமருது) கிராமிய சபைகளும் இணைக்கப்பட்டன. அப்போது சாய்ந்தமருது மக்களோ அல்லது இதற்குள் வரும் தமிழ் பிரதேச மக்களோ பாரிய எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

 

இருந்தாலும், மெதுமெதுவாக தனியான உள்ள10ராட்சி சபை வேண்டுமென்ற கோரிக்கைகள் 90களின் ஆரம்பத்திலிருந்தே மேலெழத் தொடங்கின. மு.கா.வின் ஸ்தாபக தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப் இதற்காக பல முயற்சிகளைச் செய்து, ஒரு பிரதேச சபையை உருவாக்குவதற்கான அடிப்படை ஏற்பாடுகளுள் ஒன்றாக சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகத்தை கொண்டு வந்தார். 2001ஆம் ஆண்டு, கல்முனை மாநகர சபையாக மாறிய பிறகு நிலைமைகளில் மேலும் மாற்றமடைந்தன.

 

குறிப்பாக இரு ஊர்களையும் திருப்திப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட சாணக்கிய நகர்வின் படி முதலில் சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாகிப் மேயராக நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையின் அடிப்படையில் அவர் பதவியிறக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கல்முனையைச் சேர்ந்த நிசாம் காரியப்பர் மேயராக நியமிக்கப்பட்டார்.

 

இதனால் அதிருப்தியுற்ற சிராஸ், அடுத்தடுத்து தேசிய காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கும் கூடுவிட்டு கூடுபாய்ந்தார். அவர் அப்போது தனி உள்ள10ராட்சி சபை கோரிக்கைiயும் கையிலெடுத்துச் சென்றார். இந்த நிலையிலேயே, அப்போது விடயத்திற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சரான அதாவுல்லா, (இப்போது கேட்பது போல) கல்முனை மாநகர எல்லையை நான்காக பிரித்து நான்கு நகர சபைகள் உருவாக்குவதற்காய முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அதனை ஒரு முஸ்லிம் கட்சித் தலைவர் தடுத்துவிட்டதாக அதாவுல்லா கூறியுள்ளார்.

 

மு.கா.வும் ம.கா.வும்

இந்நிலையில், மக்கள் காங்கிரஸ் கட்சி கிழக்கிற்கு விஸ்தரிக்கப்பட்ட பிறகு, சாய்ந்தமருதில் தமது கட்சி;க்கு அதிகரித்துவரும் வாக்குகளை பலப்படுத்திக் கொள்வதற்காக அதன் தலைவர் றிசாட் பதியுதீனும், அங்கு தமது கட்சியின் வாக்குவங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமும், தனி உள்ள10ராட்சி சபைக்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

 

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கல்முனைக்கு மு.கா.வினால் அழைத்து வரப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்முனை மண்ணில் இருந்தவாறு, ‘சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்படும்’ என வாக்குறுதியளித்தார். மக்கள் காங்கிரஸ் கட்சியினால் அழைத்து வரப்பட்டிருந்த உள்ள10ராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் சாய்ந்தமருதில் மக்கள் முன்னிலையில் இவ்வாறான வாக்குறுதியை வழங்கிச் சென்றிருந்தார். இதற்கு கல்முனை மக்கள் எவ்வித எதிர்ப்புக்காட்டலையும் அப்போது வெளியிடவில்லை என்பது கவனிப்பிற்குரியது. எனவே, சாய்ந்தமருது மக்கள் தமது கனவு நனவாகப் போகின்றது என்று மேலும் அதிகமாக நம்பத் தொடங்கினார்கள்.

 

இந்த முயற்சிகள் எல்லாம் ஒன்றுதிரண்டு, இதோ சாய்ந்தமருது உள்ள10ராட்சி சபை வரப் போகின்றது என்ற நிலைமை வந்தது. அப்போது, கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமுருது பிரிந்து செல்வதையும் அதற்கு மு.கா. அரசியல்வாதிக் ஆதரவளிப்பதையும் ஏற்றுக் கொள்ளாத கல்முனை மக்கள் இதற்கெதிரான நிலைப்பாட்டை பகிரங்கமாகவே எடுத்தனர். சாய்ந்தமருது எந்தளவுக்கு பிரதேச சபைக்காக அழுத்தம் கொடுத்ததோ அந்தளவுக்கு அதற்கெதிரான அழுத்தத்தை கல்முனை கொடுத்தது.

 

‘எம்மை நாமே ஆளுவதற்கு தனியான ஆளுகை அலகு ஒன்றுதேவை. அதற்கான தகுதியையும் நாம் கொண்டிருக்கின்றோம்’ என்று சாய்ந்தமருது மக்கள் கோரிநிற்க, ‘இல்லை அவ்வாறு பிரிக்க முடியாது. பிரித்தால் கல்முனையில் முஸ்லிம் – தமிழ் இன விகிதாரசாரம் கட்டமைப்பு மாற்றத்திற்குள்ளாகும். அப்படியென்றால் 1987ஆம் ஆண்டு இருந்தது போல் நான்கு அலகுகளாக பிரித்து உள்ள10ராட்சி மன்றங்களை உருவாக்குங்கள்’ என்று கல்முனை மக்கள் கூறி நின்றனர்.

 

கல்முனையின் பக்கம் பிரதியமைச்சர் ஹரீஸ் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் ஆகியோரும், சாய்ந்தமருதின் பக்கம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், முன்னாள் மேயர் சிராஸ் ஆகியோரும் நின்றனர். அந்த வகையில், மு.கா. சார்பு வாக்குவங்கியாக கருதப்படும் கல்முனைக்கும் மக்கள் காங்கிரஸ் சார்பு வாக்காளர் தளமாக பார்க்கப்படும் சாய்ந்தமருதுக்கும் இடையிலான அரசியல் அதிகார பனியுத்தமாக இது பரிணாமம் எடுத்ததைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது.

 

தடைபோட்ட வியூகம்

இந்நிலையிலேயே, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான பைசர் முஸ்தபா உள்ள10ராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப் போகின்றார் என்றும் இதில் சாய்ந்தமருதும் உள்ளடக்கப்படக் கூடும் என்றும் தகவல் வெளியானது. ஆனால், கல்முனையின் ஆதரவைப் பெற்ற கட்சி கடைசி நேரத்தில் பிரதமரின் ஊடாக விடுத்த அழுத்தத்தை அடுத்து, அவ்விடயம் அமைச்சருக்கு சொல்லப்பட்டதாகவும் அதனால் இது கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

 

அதேநேரம், மற்றைய முஸ்லிம் கட்சிக்கு கல்முனையில் இருந்து பள்ளிவாசல் நிர்வாகிகள், அரசியல்வாதி மற்றும் ஓரிரு வர்;த்தகர்களிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக கடைசித் தருவாயில் சற்று தளர்வுப் போக்கை கடைப்பிடித்ததாகவும் இவ்விரு தரப்பிலும் பரஸ்பரம் சுட்டுவிரல்கள் நீட்டப்படுகின்றன. இதேவேளை, கல்முனையை இரண்டாக பிரிப்பதால் தமக்கு நன்மை ஏற்படும் எனக் கருதிய தமிழ் அரசியல்வாதிகள், நான்காக பிரிப்பதால் வாக்குப்பலம் உடையும் எனக் கருதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, நான்கு அலகுகளாக பிரிப்பதற்குரிய அதிகாரம் இல்லாத அமைச்சரான பைசர் முஸ்தபா, சாய்ந்தமருது என்ற தனிச் சபையையாவது அறிவிக்கும் தற்றுணிபையும் இழக்க வேண்டி ஏற்பட்டுவிட்டது.

 

இதற்கிடையில், கடைசிக்கட்ட முயற்சியாக கடையடைப்பு, சத்தியாக்கிரகம் என வெகுஜனப் போராட்டங்களை சாய்ந்தமருது மக்கள் ஆரம்பித்திருந்தனர். மூன்று நாட்கள் சாய்ந்தமரு முடங்கியிருந்தது. அவர்களது இந்த ஒற்றுமையும் முயற்சியும் பாராட்டத்தக்கது. மறுபுறத்தில் கல்முனையிலும் பேரணிகள், எதிர்ப்பு பிரசாரங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, ‘சாய்ந்தமருதுவை பிரிக்க வேண்டாம்’ என்ற வாதத்திற்கு பதிலாக, ‘நான்காக பிரியுங்கள்’ என்ற கோஷம் வலுப்பெற்றிருந்தது.

 

உள்ள10ராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்த்தமானி ஒப்பமிடப்பட்ட தினமும், சாய்ந்தமருது, கல்முனை போராட்டங்களின் இறுதித் தினமுமான கடந்த 1ஆம் திகதி நிலைமை உச்சநிலையடைந்தது. ஆனாலும், சாய்ந்தமருதை தனியான சபையாக உள்ளடக்காமல் வர்த்தமானி வெளியானது. கடைசியில், சாய்ந்தமருது மக்கள் உள்ள10ராட்சி சபை விடயத்தில் தோற்றுத்தான் போனார்கள். கல்முனை மக்கள் கூட வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.

 

வெகுஜன போராட்டத்தின் இறுதியில், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆ பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபையின் கீழ் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம் பிரதேசமொன்று அரசியல் வரலாற்றில் நிறைவேற்றிய மிக முக்கியமான தீர்மானமாக இதைக் கருதமுடியும். இதில் பிரதானமானது, தனியான உள்ள10ராட்சி சபை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் வரைக்கும், எந்த அரசியல்கட்சிகளுக்கும் சாய்ந்தருது, மாளிகைக்காடு எல்லைக்குள் இடமளிப்பதில்லை என்பதும், அதுவரைக்கும் சுயேட்சைக் குழுவொன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடுதல் என்பதுமாகும்.

 

சமகாலத்தில், கல்முனை பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்கள் சம்மேளனம் தமது இறுதிநிலைப்பாடு தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியது. இங்கு கருத்துத் தெரிவித்த மேற்படி சம்மேளனப் பிரதிநிதிகள், ‘சாய்ந்தமருது தனியான ஒரு உள்ள10ராட்சி அலகாக இருக்க வேண்டுமென்று அம்மக்கள் நினைப்பது நியாயமானதே. ஆனால், இதிலிருக்கின்ற பிரச்சினை ஏற்கனவே கல்முனையோடு இணைந்துள்ள தமிழ் பகுதிகளும் அப்படியே இருக்கத்தக்கதாக அதிக முஸ்லிம் வாக்குகளைக் கொண்ட சாய்ந்தமருது மட்டும் பிரிந்து செல்லுமாக இருந்தால், முஸ்லிம்கள் – தமிழர்களுக்கு இடையிலான இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படும். இதனால், முஸ்லிம்களின் முகவெற்றிலை என்ற அடையாளத்தை கல்முனை இழந்து விடும். எனவேதான், நான்காக பிரியுங்கள். அதற்காக நாங்களும் குரல்கொடுக்கின்றோம்’ என்று தெரிவித்தனர்.

 

இருபக்க நியாயங்கள்

சாய்ந்தமருது மக்கள் சொல்வதிலும் நியாயமிருக்கின்றது, கல்முனை மக்கள் சொல்வதிலும் நியாயமிருக்கின்றது. இதில் ஒன்றைப் புறக்கணித்து மற்றையதை சரிகாண இயலாது. ஆனால், இவ்விரு நியாயங்களும் அந்தந்த ஊர்களின் தற்சார்பு அடிப்படையிலானது என்பதையும் இதில் யாருடைய நியாயம் கனதியானது என்பதையும், எந்த ஊரின் கோரிக்கை நீண்டகாலமானது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
சாய்ந்தமருது மக்கள் தனி உள்ள10ராட்சி சபையை கோருவதில் எந்தத் தவறும் கிடையாது. சுமார் 20 வருடங்களாக சாய்ந்தமருது மக்கள் தனிச் சபை குறித்து பேசி வருகின்றார்கள். இந்தக் காலப்பகுதியில் சாய்ந்தமருது பிரிந்து விட்டால் ஏற்படக் கூடிய இன விகிதாசாரப் பாதிப்புக்களை சீர்செய்ய கல்முனை செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அல்லது அவர்கள் தம்மோடு ஒன்றாக இருக்க வேண்டுமென்றால், அதற்கான வழிவகைகளை செய்திருக்க வேண்டும். இப்போது எல்லாம் கைமீறிப் போய், பிரிந்துசெல்ல வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பவர்களிடம் ‘சேர்ந்திருப்போம்’ என்று கூறுவதில் பயன்கிட்டாது.

 

உண்மையில், சாய்ந்தமருது பிரிக்கப்பட்டாலும் கல்முனையில் முஸ்லிம்களின் வாக்குகளும் பிரதிநிதித்துவமும்தான் அதிகமாகவே இருக்கும். அப்படியானால், ஏன் அச்சப்படுகின்றார்கள்? என்ற கேள்வி எழுகின்றது. அதாவது, தேர்தல் வந்தால் கல்முனையில் முஸ்லிம்கள் நான்கு ஐந்து கட்சிகளில் போட்டியிடுவார்கள். வாக்குகள் சிதறி ஆட்சியும் மேயர் பதவியும் இல்லாமல் போகும். தமிழர்கள் ஒரேகட்சியில் போட்டியிட்டு இரண்டையும் பெறுவார்கள் என்பதே அந்த அச்சத்தின் அடிவேராகும். ஆனால், இன்று ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற கல்முனை மக்களால், ‘சாய்ந்தமருது பிரிந்தாலும் நாங்கள் ஒற்றுமைப்பட்டு ஒருகட்சிக்கு வாக்களித்து ஆட்சியை தக்க வைப்போம்’ என்று கூற முடியாதுள்ளது.

 

அதேவேளை, நான்கு சபைகளாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஒரு மாதம் வரை பொதுத்தளத்தில் முன்வைக்கப்படவில்லை. எல்லாம் கைகூடி வந்தபிறகு, நான்காக பிரிப்பது சாத்தியமில்லாத ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் கோரிக்கையை முன்வைப்பதை, தனிச் சபை உருவாவதை தடுக்கும், தள்ளிப்போடும் ஒரு முயற்சியாகவே சாய்ந்தமருது மக்கள் நோக்குவார்கள் என்பதை கல்முனை மக்கள் உணர வேண்டும்.

 

மறுபுறத்தில், சாய்ந்தமருது மக்களும் கல்முனை மக்களின் நியாயங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள், சாய்ந்தமருதுக்கு தனிச் சபை தருகின்றோம் என்று கூறியது போல, நான்காக பிரிப்போம் என்று கல்முனைக்கும் வாக்குறுதி அளித்திருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் கல்முனையில் இன விகிதாசாரம் பாதிக்கப்படுவதும் மாநகரில் ஆட்சிப்பலம் குறைவதும் கல்முனைக்கு மட்டுமான பிரச்சினையல்ல என்பதையும் அது ஒட்டுமொத்த கிழக்கு முஸ்லிம்களின் கரிசனைக்குரிய விடயம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். சாய்ந்தமருதை அவசரப்பட்டு பிரித்தெடுத்ததாலேயே கல்முனை முஸ்லிம்களிடம் இருந்து பறிபோனது என்ற பழிச் சொல்லுக்கும் சாய்ந்தமருது மக்கள் ஆளாகத் தேவையில்லை.
உண்மையில், இந்த விடயங்களை எல்லாம் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகளே. சாய்ந்தமருதுக்கு உள்ள10ராட்சி சபை வழங்கப்பட முடியாது என்றால் அதை ஏற்கனவே சொல்லியிருக்க வேண்டும். நான்காக உடைத்த பின்னரே உங்களுக்கும் தருவோம் என்று சொல்லியிருக்க வேண்டும். அல்லது கல்முனை – சாய்ந்தமருது மாநகர சபையாக மாற்ற முயற்சித்திருக்க வேண்டும். நம்ப வைத்து ஏமாற்றியிருக்கத் தேவையில்லை. அதேபோன்று, சாய்ந்தமருதின் கோரிக்கையில் உள்ள நியாயங்களை கல்முனைக்கு தெளிவுபடுத்துவதுடன், ஆரம்பத்திலிருந்தே நான்கு சபைகளை உருவாக்குவதற்காக பாடுபட்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, கிராமப்புறத்தில் சொல்வது போல் கூட்டிவிட்டுவிட்டு கூத்துப் பார்த்திருக்க தேவையில்லை.

 

பெரிய ஆர்ப்பரிப்புக்கள் பந்தாக்கள் இல்லாமல் அமைச்சர் மனோ கணேசன் கிட்டத்தட்ட தனிஆளாக நின்று நுவரெலியாவில் நான்கு சபைகளை உருவாக்கியிருக்கின்றார். ஆனால், 21 முஸ்லிம் எம்.பி.க்களும் கட்சித்தலைவர்களும் இருந்தும்கூட இந்த கட்சிகளால் உசுப்பேற்றப்பட்ட இழுபறிகளின் காரணமாக, கிடைக்கவிருந்த சாய்ந்தமருது சபை இல்லாமல் போயிருப்பதுடன், 4 சபைகளாக பிரிப்பதும் 4 வருடங்களுக்கு சாத்தியமற்றதாகிவிட்டது.

கையலாகாத, கேடுகெட்ட உணர்ச்சி அரசியல் செய்யும் இந்த முஸ்லிம் அரசியல் சமன்பாட்டின் பெறுபேறு ‘பூச்சியமாக’ ஆகியிருக்கின்றது.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 05.11.2017)