வட மாகாண சபைக்கு பல தேவைகள் உள்ளன. எனவே எமக்கான நிதி மூன்று நான்கு மடங்கு அதிகமாக தேவையாகவுள்ளது. எமது மாகாணம் கடுமையாக போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையை முன்வைத்தாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் இல்லத்தில் முதலமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேலும் குறிப்பிடுகையில்
வடமாகாண ஆளுநர் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இன்று (நேற்று)காலை 9.20 மணியளவில் நிலையில் அங்கிருந்து தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்புகொண்டார். அப்போது 10மணிக்கு ஜனாதிபதி யாழ்ப்பாணத்துகன்கு வருகைதருவதாகவும் என்னை அதில் பங்கேற்குமாறு கோரினார்.
சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன் உள்ள மாநகரசபை வளாகத்திற்கு உலங்குவானுர்தி மூலம் வந்திறங்கிய ஜனாதிபதியை வரவேற்று யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றோம்.
இச் சந்திப்பின்போது புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பாக பெற்றோர்களுடன் சந்திப்பும் இடம்பெற்றது. இதில் மாணவியின் கொலைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இவை விரைவாக நடாத்தப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் ஆசிரியர்களினால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி என்னிடம் எவ்வாறு விரைவாக செய்யலாம் என ஆலோசனை கேட்டார். அதற்கு நான் தெற்கில் பொலிஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட நபர் தொடர்பான விசாரணையின்போது பதுளை மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தேன். அதன்போது மூன்று நீதிபதிகளை நியமித்து அதற்கான விசாரணைகளை துரிதப்படுத்தினோம் எனக் கூறினேன். இதற்கமைவாக ஜனாதிபதியும் தாம் கொழும்பு சென்று சட்டத்துறை தலைமை அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமது பாடசாலைகளில் நிலவுகின்ற தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.
இதன்போது ஜனாதிபதி தனது அதிகாரிகளிடம் கோரிக்கைகளை எழுதுமாறும் கொழும்பு சென்றதும் இதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். மேலும் பாடசாலைகளின் குறை நிறைகளை தீர்ப்பதற்கு விசேட அதிகாரி ஒருவரை நியமித்து அதற்கான நடவடிக்கைள் மேற்கொள்வதாகவும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான பொலிஸ் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இதேவேளை மாணவர்கள் கோரிக்கைகள் முன்வைத்ததுபோல் நானும் வடமாகாண சபை சார்பாக ஒருசில கோரிக்கைகளை முன்வைத்தேன். குறிப்பாக எமக்கு நிதி போதாது. எமது சபைக்கு பல தேவைகள் உள்ளன. எமக்கான நிதி மூன்று நான்கு மடங்கு அதிகமாக தேவையாகவுள்ளது. எமது மாகாணம் கடுமையாக போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தேன்.
மேலும் நீதிமன்றம் மீதான தாக்குதலின்போது கைது செய்யப்பட்டவர்களில் க.பொ.சா.தரம் மற்றும் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் அடங்குகின்றனர். இவர்கள் மீது விசாரணைகளை நடத்தி விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நானும் பெற்றோர்களும் கேட்டுக்கொண்டோம்.
இதற்கு தொடர்பில்லாதவர்களை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.