பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கே எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. அவ்வாறாயின் எதிர்க்கட்சிக்கு முடியுமாக இருந்தால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்துக் காட்டுமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்தார்.
இந்த பாராளுமன்றத்தினால் நீண்ட காலம் பயணிக்க முடியாது. நிரந்தரமான அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு புதிய பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக திருடர்களின் உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எமக்கு ஆட்சியை ஒப்படையுங்கள். பாராளுமன்றத்தை நாம் கலைத்துக் காட்டுவோம் என்று தினேஷ் குணவர்தன எம்.பி.விடுத்த சவால் தொடர்பில் வினவிய போதே
அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சிறுப்பான்மை பிரதிநிதித்துவத்தை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆட்சி அமைக்க அரசியலமைப்பில் இடமில்லை. ஆகவே ஆட்சிப்பீடத்தை எமக்கு வழங்கினால் நாம் பாராளுமன்றத்தை கலைத்து காட்டுவோம் என முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன சவால் விடுத்திருந்தார். அத்தோடு இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனே இவ்வாறு எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் இத்தகைய செயற்பாடுகளினால் எம்மை அச்சுறுத்த முடியாது. எதிர்க்கட்சிகளுக்கு பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஆட்சியை பிடிப்பதே பிரதான குறிக்கோளாக இருப்பின் தினேஷ் குணவர்தனவினால் விடுக்கப்பட்ட சவாலுக்கு அமைவாக முடியுமனால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து காட்டுங்கள்.
அவ்வாறு கலைப்பதினூடாக நிரந்தரமான ஆட்சியை நாட்டு மக்களால் உருவாக்க முடியும். அதனூடாக மக்களின் உடைமைகளை சூரையாடிய திருடர்கள் வௌிச்சத்துக்கு கொண்டு வர முடியும். இந்த பாராளுமன்றத்தினால் நீண்ட காலம் பயணிக்க முடியாது. நிரந்தமான அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு புதிய பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும்.
அது மாத்திரமின்றி பாராளுமன்றம் கலைப்பதினூடாக எதிர்க்கட்சியின் திருட்டுத்தனமான செயற்பாடுகள் முடிவுக்கு வரும். அத்தோடு தேர்தலினூடாக மக்களின் ஆணை யார் பக்கம் உள்ளது என்பதும் தெரியவரும். அதன் பின்னர் எதிர்க்கட்சிகளில் வீண் விளையாட்டுக்கள் முடிவுக்கு வரும். எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்றார்.