தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசில் இணைந்து வடக்கு மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். வரலாற்றை மறந்து விட்டு புதிய அரசியல் நீரோட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நுழைய வேண்டும். அதன் மூலமே வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது குறித்துச் சிந்திக்கும் நேரம் வந்துள்ளது. என்கின்றார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
புதிய அரசமைப்புத் தொடர்பான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையின் மீது அரசமைப்புச் சபையில் நடந்த விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பௌத்த சிங்கள தேசியவாத அரசோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கிச் செயற்படுவதன் ஊடாக நலன்களை அடைந்து கொள்ள முடியும், அப்படித்தான் தமிழர்கள் தமது நலன்களை, உரிமைகளைச் சிங்களவர்களிடமிருந்து சலுகைகளாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தான் அவர் கூறியிருப்பதன் சாராம்சம்.