தமிழ்த தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறலாம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில்,“தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள கட்சிகள் ஆரம்பத்தில் இணைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்த கட்சிகள் தற்போது இல்லை.தமிழீழ விடுதலை இயக்கம் மட்டுமே ஆரம்பத்திலிருந்து இருக்கின்றது. இதன்படி, யாரும் வரலாம், யாரும் போகலாம் என்ற ரீதியிலேயே கூட்டமைப்பு செயற்படுவதாக தென்படுகின்றது.
எனவே, யாராவது கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனியாக தேர்தலில் போட்டியிட முடியுமாக இருந்தால் போட்டியிடலாம். அதற்கான பரிபூரண சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது.
நாங்கள் வலுக்கட்டாயமாக யாரையும் பிடித்து வைத்திருக்க போவதில்லை. கூட்டமைப்பில் இருந்து வெளியேறி சுதந்திரமாக செயற்பட முடியும்.இதனிடையே, வெளியிலிருக்கும் கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதாக தெரிவித்தால் அதனையும், நாங்கள் வரவேற்பதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துச் செயற்படப் போவதாக ஈபி.ஆர்.எல்.எப் அண்மைய நாட்களாக கூறிவரும் நிலையில், எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.