உடன்பிறப்புகளே,
அஸ்ஸலாமுஅலைக்கும்.
பாலமுனை பிரகடனம்
29.10.2017 ஞாயிறு பி.ப. 2.30 பொது விளையாட்டு மைதானம்
காலாகாலமாய் ஒரு முடிவு காணப்படாமல் புரையோடிப் போயிருக்கும் நம் நாட்டின் இனச் சிக்கலுக்கு ஒரு தீர்க்கமானதும், யதார்த்தமானதுமான தீர்வொன்றை எட்டுவதில் – எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் – அவர்கள் எடுக்கும் பிரயத்தனங்கள் வலுவிழந்து போவதற்கும் தாமதமாவதற்கும் – வெளி உலகக் கழுகுகளின் மறைகரங்களே காரணமாக இருந்து வந்திருக்கின்றன. அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி நம் நாட்டின் இயற்கை வளங்களையும் நமக்கே உரித்தான இயற்கையின் அமைவிடங்களையும் எப்படியாவது கவ்விக் கொள்ளத் திட்டமிட்டு நம் எல்லைகளில் வட்டமிடுகின்றன. அந்த முயற்சியில் இந்தக் கழுகுகள் ஏலவே அதன் வேட்டை நகங்களால் நமது நாட்டை பலமுறை கவ்வி கிழித்தும் போட்டன. எது கழுகு? எது புறா? என்று அறியாத கபோதிகளாய் நம் அரசியல் தலைமைகளில் பலர் அக்கழுகுகளுக்கு வேட்டையாட வசதிசெய்து கொடுத்து – கவ்விக் கொண்டு போனபின், ஐயஹோ! வந்தவை புறாக்களல்ல கழுகுகள்தான் என்று நடிக்கின்றனர். விசேடமாக நம் முஸ்லிம் தலைமைகள் கழுகுக் குஞ்சுகளாகவே இன்னும் இருந்து வருகின்றனர்.
அன்றைய நாள் தொட்டு, பெருந்தலைவர் அஸ்ரஃப் அவர்கள் சொன்ன கருத்துக்களையும் அதை அடியொற்றி நாம் சொன்ன கருத்துக்களையும் அவற்றில் பொதிந்திருந்த யதார்த்தங்களையும் கடந்த காலங்களில் கழுகுக் குஞ்சுகளின் கபடத்தனங்களைப் புரியாமல் நம் அப்பாவி மக்களும் புத்திஜீவிகளும் கூட அக்கருத்துக்களை புறக்கணித்தும், விமர்சித்தும் வந்திருக்கின்றனர். இன்று அனைவரும் உண்மைத் தன்மையை விளங்கி விளிப்படைந்திருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். என் உடன் பிறப்புகளே! நான் உங்களை வாழ்த்துகிறேன். இன்ஷா அல்லாஹ் இனி நமக்கு வெற்றியே.
முஸ்லிம் சமூகம் என்றுமே தேசப்பற்றுள்ள ஒரு சமூகம். அவ்வாறு அவர்கள் வாழ்ந்ததனால்தான் தொன்று தொட்டு ராஜாக்களோடும், ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்களோடும் பின்னிப்பிணைந்திருக்கிறார்கள். இருப்பினும், தீர்வுகள் என்று வரும் போது நம்மை சிறு குழுவாகவும், புழுவாகவும் சித்தரிக்க நமது கழுகுக் குஞ்சுகளே காரணமாய் இருந்து வருகின்றன. அண்மையில் மாகாண சபையிலும், பாராளுமன்றிலும் எதற்காக என்று தெரியாதவர்கள் போல் கையுயர்த்திவிட்டு மேசை உடைய ஆடிய கபட நாடகங்களே இதற்கு சான்று பகர போதுமானது.
இப்போது, முழுப் பாராளுமன்றமும் அரசியல் அமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதன் மூலம் ஒரு புதிய அரசியல் யாப்பொன்றை தோற்றுவிக்கும் முயற்சியில் கழுகுகளும், குஞ்சுகளும் வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டு வருகின்றன. புதிய அரசியல் அமைப்புக்காய் நியமனம் செய்யப்பட்ட வழி நடாத்தல் குழுவின் எழுபதுக்கு மேற்பட்ட கூட்டங்களில் ஒன்றிலாவது நமது சமூகத்தின் அபிலாஷைகள் முறையாக முன்வைக்கப்படாத வரலாற்றுத் துரோகத்தை சகோதர சமூகத்தின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய போது இடிவிழுந்ததுபோல் நம் சமூகம் அதிர்ந்து போயிற்று.
வஞ்சிக்கத் துணிவோர் எப்படியான முகமூடிகளோடு வந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரையும் துல்லியமாக இனங்கண்டு அவர்களை துணிச்சலோடு முகம் கொள்ள மாதலைவன் அஸ்ரஃப்பின் பாசறை எம்மை பயிற்று வித்திருக்கிறது.
ஆதலால், என் உடன் பிறப்புகளே!
☆ என்றுமில்லாதவாறான பேராபத்திலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவோம்.
☆ மூவின மக்களும் ஒன்று சேர்ந்து வாழும் முறைமைக்கு வித்திடுவோம்.
☆ கழுகுகளின் கொத்துக் குதறல்களுக்கு இடம் கொடாமல், முஸ்லிம் சமுதாயத்தின் அபிலாசைகளை வென்றெடுப்போம்.
☆ இவற்றுக்காய் வீரிய விதைநட்டு, நம்நாடும் மக்களும் – சர்வதேசமும் அறிந்திட பாலமுனையில் முழக்கமிட்டு பிரகடனம் செய்வோம்.
இது உனது பிரகடனம் – நம்மவரின் வரலாற்றுப் பிரகடனம். கலந்து கொள்வது உனக்குக் கடமையாகிறது.
உரிமைப் பணியில்
ஏ.எல்.எம். அதாஉல்லா
தலைவர் – தேசிய காங்கிரஸ்