கலாபூசணம் மீரா .எஸ்.இஸ்ஸடீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தனது இறுதிக் காலப்பகுதியில் ஒலுவில் கிராமத்தில் ஒரு வீட்டை நிர்மாணித்து வசித்து வந்தார்.
அன்னாருடைய அகால மரணத்தைத் தொடர்ந்து கடந்த 17வருடங்காக ஒலுவில் வீடு யாரும் கவனிப்பாரற்று பாழடைந்து கிடக்கின்றது .வீட்டைச் சுற்றி மரஞ்செடி கொடிகள் நிறைந்து காணப்படுகினறன.
அவர் மறைந்த செப்டம்பர் 16ஆம் திகதியையும் அவர் பிறந்த ஒக்டோபர் 23ஆம் திகதியையும் நினைவுறுத்துபவர்கள் அவர் வாழ்ந்த வீட்டை கவனிக்காமல் விட்டிருப்பது ஒலுவில் மக்களை மட்டுமன்றி கட்சிப் போராளிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தலைவர்கள் வாழ்ந்த வீடுகள் அரசுடமை நினைவிடமாக அல்லது சமூக நற்காரியங்களுக்கான அமைவிடமாக விளங்குவது யாவரும் அறிந்ததே.
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் ஒலுவில் சந்தியிலிருந்து வெளிச்ச வீட்டுக்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள இவ்வீடு பராமரிப்பு இன்மையால் சேதமடைந்து காணப்படுகின்றது.
இது தொடர்பாக பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்:-
தலைவர் இந்த வீட்டில் வாழ்ந்திருந்த போது எங்களிடம் எனது வயதான காலத்தில் ஓய்வாக இவ்விட்டில் இருந்து கொண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று சட்டத்துறை தொடர்பான விரிவுரைகளைச் செய்ய வேண்டும் என்று கூறுவார்.பட்டமளிப்பு விழாக்களின் போது பட்டதாரிகள் இவ்வீதி வழியாக அணிவகுத்துச் செல்வதைக் காண வேண்டும் என்பார்.
இந்தவீட்டை நல்ல காரியங்களுக்கு அல்லது கல்வி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி அவர் நேசித்த ஒலுவில் கிராமத்து மக்களுக்குப் பயன் அளிக்கலாம். மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களுக்கும் நிலையான நன்மையைப் பெற்றுக் கொடுக்கலாம். இந்த சமூகத்துக்கு அளவிட முடியாத சேவைகளைச் செய்த தலைவர் அஷ்ரஃபின் தனிப்பட்ட சொந்த வீட்டைப் பாதுகாக்க முடியாத மக்கள் பிரதிநிதிகள் கண்டு கொள்ளாமலிருப்பது கவலை அளிக்கின்றது ஏன்று தெரிவித்தார்.
நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலர் மர்ஹூம் அஷ்ரஃபின் புகைப்படங்களை வைத்தே அரசியல் செய்து காலத்துக்குக் காலம் பயன் பெற்று வருகின்றனர். அவ்வாறு பயன் பெறுகின்றவர்கள் தங்களுக்கு வழிகாட்டிய மனிதர் வாழ்ந்த வீட்டை இந்த நிலைக்கு விட்டு வைத்துள்ளனர்.இந்த வீட்டை புனரமைத்து சமூகத்துக்குப் பயனுள்ள காரியங்களுக்கும், கல்வி , சமய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம். அல்லது பொது மக்கள் இவ்வீட்ஐ டபொழுது போக்குக்காவது பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்தார்.
தலைவர் அஷ்ரஃப் இந்த மண்ணிலே வாழ்ந்து இங்கேயே மரணிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு கட்டியவவீடு இன்று பாழடைந்து கிடப்பதையிட்டு கவலையாக இருக்கின்றது’ ஏன்று தெரிவித்தார்.
மர்ஹூம் அஷ்ரஃபின் பெயரைச் சொல்லி பாடல்களை ஒலிபரப்பி புகைபபடங்களைக் காட்சிப்படுத்தி அரசியல் செய்கின்ற கனவான்கள் இந்த வீட்டை புனரமைப்புச் செய்து மக்கள் கூறும் ஆலோசனைகளுக்கு அமைய சமூகத்துக்குப் பயனுள்ள நிலையமாக மாற்றுவதற்கு முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.