ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை தொடர்பில் நல்ல விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மிக அரிது. குற்றச்சாட்டுகளே அதிகம். அண்மைக்காலமாக இந்த வைத்தியசாலையின் நிர்வாகம் தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இறைவன் நாட்டம் எப்படியாக இருந்த போதிலும் அநியாயமாக பல உயிரிகள் பறிக்கப்பட்டமைக்கு இந்த வைத்தியசாலையின் அசமந்தப் போக்கே காரணம் என்பது பொதுவெளி விமர்சனம். அரசியல் அதிகாரங்கள் இங்கு குவிந்து காணப்படுவதனால் இங்கு இடம்பெறக் கூடிய வருந்தத்தக்க விடயங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன.
மக்களால் கேள்விக்கு உட்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என நிர்வாகம் கூறுவதுடன் அது முடிந்து விடுகிறது. இது கவலையான விடயம்.
இறுதியாக இரு தினங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் கடந்த நிலையிலும் எவ்வித சிகிச்சையும் மேற்கொள்ளப்படாது அவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களையும் பிரதேச மக்கள் முன்னெடுத்த நிலையில், வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான் அவர்கள், குறித்த மரணம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை தரும் பட்சத்தில் அது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன் எல்லாம் முடிந்து விட்டது. மக்களும் கலைந்து சென்றனர்.
வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான் அவர்களும் அப்பாடி… ஒருபடியாக மக்களை சேப் பண்ணி அனுப்பி விட்டேன் என்று நிம்மதியடைந்துள்ளார். இவ்வாறு நடப்பது புதிது அல்ல.. மாமூலானதுதான்.
சரி இனி விடயத்துக்கு வருவோம்.. குறித்த நபர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை. அதற்குரிய டாக்டர் விடுமுறையில் சென்றதால் பதிலாக கடமையாற்றக் கூடியவர் பகல் நேரத்தில் மட்டுமே பணியில் இருந்துள்ளதாக தெரிய வருகிறது.
அவர் தனது கடமை முடிந்து சென்ற பின்னரே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவ்வாறாயினும் ஒரு டாக்டர் விடுமுறையில் செல்ல அவருக்குப் பதிலாக கடமையாற்றும் மற்றைய டாக்டர் பகல் நேரத்தில் பணி புரியும் போது மட்டும்தானா இவ்வாறான எதிர்பாராத சம்பவங்கள் இடம்பெற வேண்டுமா? ஏன் இரவு நேரங்களில் ஏற்படக் கூடிய இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்ளுவதற்கான தயார் நிலையில் அந்த வைத்தியசாலையில் ஓரிரு வைத்தியர்களாவது பணியில் அமர்த்தக் கூடாதா?
சுமார் 30க்கும் மேற்பட்ட வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் கடமையாற்றும் குறித்த வைத்தியசாலையில் இரவு நேரங்களிலும் ஏன் வைத்திய, வைத்திய நிபுணர்களில் ஓரிருவரையாவது பணிக்கு அமர்த்தக் கூடாது? இது தொடர்பில் வைத்திய அத்தியட்சகர் றஹ்மான் அவர்கள் என்ன விளக்கத்தை தர முடியும்?
அன்றைய சூழ்நிலையில் தங்களால் எதனையும் செய்ய முடியாது அல்லது, கால தாமதமாகும் என்ற அவசர தீர்மானத்தின் அடிப்படையிலாவது பாதிக்கப்பட்ட நபரை மட்டக்களப்பு அல்லது அம்பாறை வைத்தியசாலைகளில் ஒன்றுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையாவது செய்திருக்கலாம்தானே? அம்பியூலன்ஸில் குறித்த இரு இடங்களையும் சென்றடைவதற்கு ஒரு மணித்தியாலம் போதுமானது தானே?
மேலும் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது நிலைமை தொடர்பில் அப்போது கடமையிலிருந்த சாதாரண டாக்டர், வைத்திய அத்தியட்சகருக்கு தகவல் வழங்கினாரா?
மேலும் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான் அவர்கள், குறித்த மரணம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை தரும் பட்சத்தில் அது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என எவ்வாறு கூற முடியும்? பாதிக்கப்பட்டவரின் தரப்பிலிருந்து முறைப்பாட்டைப் பெறாமலேயே இந்தச் சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு இவருக்கு உண்டல்லவா?
இது இவ்வாறிருக்க, கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் கடமை புரியும் டாக்டர்களில் அதிக எண்ணிக்கையானோர் டிஸ்பென்சரிகள் நடத்துவதிலும் அங்குதான் நோயாளர்கள் சிகிச்சை பெற வேண்டுமென்ற ஒரு போக்குடன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேலும் சில டாக்டர்கள் சில பாமர்சிகளின் கொந்தராத்துக்கார்களாகச் செயற்பட்டு வைத்தியசாலையில் மருந்துகள் இருந்தும். இல்லை என்று கூறி வெளியிலுள்ள சில பார்மசிகளின் பெயரைக் குறிப்பிட்டு அங்குதான இந்த மருந்தை நீங்கள் வாங்க வேண்டும். மற்றைய கடைகளில் உள்ளவை டூப்ளிகேற் என்று கூறி அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் மக்களால் எதனையும் செய்ய முடியாது. அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ஹாரீஸ் அவர்கள் தலையிட்டால் மட்டுமே வைத்தியசாலை நிர்வாகத்தைச் சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
மத்திய அரசின் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிமும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவரால் ஒன்றும் செய்ய முடியாது ஹாரீஸ் அவர்களால்தான் இதனைச் செய்ய முடியும் என்பதும் நிச்சயமாக அவர் இந்த விடயத்தைக் கையாள்வார் என்பதும் எனது திடமான நம்பிக்கை. –