முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய புதிய நூலின் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஜனாதிபதியாக பதவிவகித்து ஓய்வுபெற்ற பிரணாப் முகர்ஜி தனது தலைமையிலான மந்திரிசபையில் தன்னுடன் இணைந்து பணியாற்றியதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்விழாவில் நினைவு கூர்ந்தார்.
பிரணாப் முகர்ஜிக்கு உள்ள அரசியல் திறமையை வெகுவாக பாராட்டிய மன்மோகன் சிங், அவரது ஆற்றல் இயற்கையில் அமைந்தது. நானோ.., முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் அழைப்பின் பேரில் மத்திய நிதி மந்திரி பதவியை ஏற்க ஒரு விபத்தாக அரசியலுக்கு வந்தவன். அப்போது பிரணாப் முகர்ஜி மத்திய திட்டக்குழுவின் துணை தலைவராக என்னுடன் இணைந்து பணியாற்றினார்.
2004-ம் ஆண்டு சோனியா காந்தி எதிர்பாராதவிதமாக இந்நாட்டின் பிரதமராக என்னை தேர்வு செய்தபோது பிரணாப் முகர்ஜி சற்று மனவருத்தப்பட்டார். அந்த நியமனத்தில் நான் செய்வதற்கு எதுவும் இல்லை. அது கட்சி தலைமையின் முடிவு என்பதை அவர் அறிந்திருந்தார்.
அதன் பின்னர் எனது தலைமையிலான மந்திரிசபையில் நிதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக அவர் பணியாற்றினார். அந்த தொடர்பு இன்றுவரை நீடித்து வருகிறது எனவும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.