டென்னிஸ் விளையாட்டின் தலைசிறந்த வீரரான ரபேல் நடால் கடந்த 2012 ஆம் ஆண்டு முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 மாதம் எந்த போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்.
அப்போது பிரான்ஸ் நாட்டின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்த ரோஸ்லீன் பச்லெட் நடால் குறித்து கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார். அதில் ‘நடால் காலில் அடிபட்டது உண்மையல்ல. அவர் ஊக்கமருந்து சோதனையிலிருந்து தப்பிக்கவே அவர் காயம் ஏற்பட்டதாக கூறி ஓய்வு எடுத்தார்’ என குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து நடால் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் இழப்பிற்கும் நஷ்ட ஈடாக 1,18,000 டாலர் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது நடால் மற்றும் பச்லேட் இருவரும் ஆஜராகவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பு நவம்பர் 16-ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
16 முறை கிராண்ட் ஸ்லாம் பெற்ற ரபேல் நடால் இதுபற்றி கூறுகையில் ‘பச்லேட்டின் நடவடிக்கை மிகவும் மோசமாக உள்ளது. அவர் எவ்வித ஆதாரமும் இல்லாமல் என் மீது குற்றம் சாட்டியுள்ளார். பிரான்ஸ் போன்ற நாட்டின் மந்திரி இது போன்ற காரியத்தில் ஈடுபடுவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் இதுவரை நடந்த ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தது கிடையாது. வேறு யாரும் ஆதாரம் இல்லாமல் இது போன்று என் மீது குற்றம் சாட்டினால் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என கூறினார்.