பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் சொத்து மதிப்பு சுமார் 420 மில்லியன் பவுண்டு

பிரித்தானியாவில் 1952 ஆம் ஆண்டு முதல் மகாராணியாக வலம் வரும் இரண்டாம் எலிசபெத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரித்தானிய அரச பரம்பரையில் முதன் முறையாக மிக நீண்ட காலமாக ஆட்சியில் இருந்துவருகிறார் 91 வயதாகும் இரண்டாம் எலிசபெத் மகாராணி.

எலிசபெத் மகாராணியாருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர் , இளவரசர் சார்லஸ்(68), இளவரசி ஆன்(67), இளவரசர் ஆண்ட்ரூ(57) மற்றும் இளவரசர் எட்வர்ட்(53) என நான்கு பிள்ளைகள்.இந்த நிலையில் நெடுங்காலமாக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சொத்து மதிப்பு குறித்து பலதரப்பட்ட கருத்துகள் பிரித்தானியாவில் உலாவி வந்தன.ஆனால் இந்த கருத்துகளுக்கு அரண்மனை வட்டாரம் எவ்வித பதிலும் கூறாமல் மறுப்பு தெரிவித்தே வந்தது.

தனிப்பட்ட முறையில் சொத்துக்கள் இருப்பினும் பரம்பரை சொத்துக்களிலும் அவருக்கு உரிமை உள்ளது.தற்போது இந்த விவாதங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனியார் செய்தி பத்திரிகை ஒன்று மகாராணியார் சொத்துக்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியாருக்கு சுமார் 420 மில்லியன் பவுண்டு சொத்துக்கள் இருப்பதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆண்டுக்கு 9.8 மில்லியன் பவுண்டு உதவித் தொகை வழங்கப்படுவதும் அவரது சொத்தில் ஒரு பகுதியாக கணக்காகப்படுகிறது. மேலும் மகாராணியின் பிரத்யேக சேகரிப்பில் உள்ள ஆபரணக்கள் மற்றும் விலைமதிப்பற்ற மரச்சாமான்களின் மதிப்பு சுமார் 84 மில்லியன் பவுண்டு எனக் கூறப்படுகிறது.மட்டுமின்றி மாகாராணியின் தாயார் இறக்கும் போது சுமார் 50 முதல் 70 மில்லியன் பவுண்டு சொத்துக்களை எலிசபெத் மகாராணியின் பெயரில் விட்டுச் சென்றுள்ளார்.மட்டுமின்றி பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளிட்ட Crown எஸ்டேட்டின் மொத்த மதிப்பு என்பது 7.6 பில்லியன் பவுண்டாகும். இதில் மகாராணியின் தனிப்பட்டச் சொத்துக்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராணியாருக்கு தற்போது சொந்தமாக இருக்கும் எஸ்டேட்டுகள் அனைத்தும் அவரது தந்தையார் ஜார்ஜ் VI அரசரிடம் இருந்து வந்ததாகும்.