முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒன்றாகாதவரை முஸ்லிம்களின் தலையெழுத்து பரிதாபமானதே

 
இன்றைய நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணையாவிட்டாலும் முஸ்லிம் கட்சித் தலைமைகளாவது ஒன்று சேர்ந்து தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒருமித்து குரல் கொடுத்து ஆக்கபூர்மான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைமைகளும் வெவ்வேறான பாதையில் பயணிக்கும் போக்கானது சமூகத்தின் மத்தியிலும் பிரிவினகளை அதிகரிக்கச் செய்து ஆபத்தான நிலைக்கே இட்டுச் செல்லும்.

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எழுந்த நிலைமைகள், இந்தச் சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு தினத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விரும்பத்தகாத செயற்பாடுகளை நாம் உன்னிப்பாக அவதானிக்கும் போது எமது சமூகம் இன்னும் ஓடிப்பிடித்து ஒளிந்து விளையாடும் தலைமைகளைக் கொண்டதாக காணப்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெறுவதற்கு முன்னர் இந்நாட்டு முஸ்லிம் அரசியல் முக்கியஸ்தர்கள் தேசியக் கட்சிகளுடன் இணைந்து அதிகாரத்திலிருந்த போது அவர்களால் எமது சமூகம் பெற்றுக் கொண்ட நன்மைகளை விட எங்களுக்கென தனியான முஸ்லிம் அரசியல் கட்சிகள் உதயம் பெற்ற பின்னர் நாம் அடைந்த தீமைகளும் பின்னடைவுகளுமே அதிகம் என்று கூறக் கூடிய அளவுக்கு நாங்கள் ஆக்கப்பட்டுள்ளோம் என்பது கவலைக்குரிய விடயம்.

மேலும், இந்த நாட்டில் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தை தோற்கடிக்கச் செய்ததில் எங்களுக்கும் பங்கு உண்டு என எமது தலைமைகள் மார்தட்டிக் கொள்வது மட்டும்தான் இன்று எஞ்சியுள்ளது. இந்த அரசின் ஊடாக ஆக்கபூர்வமாக எதனையும் செய்ய முடியாத கையறு நிலையில் எமது அரசியல் தலைமைகள் உள்ளன. இந்த விடயத்தில் நாங்கள் இன்றைய நல்லாட்சி மீது முற்று முழுதாக குற்றம் சொல்வதும் தவறு.

அரசியல் ரீதியிலான போட்டிகள்…. இதனை நானே செய்ய வேண்டும்… நீ செய்யக் கூடாது… என்ற துர் எண்ணங்கள். காட்டிக் கொடுப்புகள்… காரணமாகவே நல்லாட்சியிலும் கூட முஸ்லிம் சமூகம் எவ்வித விமோசனமும் அற்றவர்களாக காணப்படுகின்றனர். முஸ்லிம் தலைமைகளின் பல்திசை முரண்பாடுகளை இன்றைய அரசும் தங்களுக்குச் சாதக சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி கச்சிதமாக தனது காய் நகர்த்தலை முன்னெடுத்துச் செல்கிறது

இந்த நிலையில் தமிழ் பேசும் அரசியல் தலைமைகளின் இலக்குகள் வேறானவை என்பதனைச் சற்றுச் சிந்தித்து பாருங்கள்.. சீ.வி.விக்னேஸ்வரன் ஐயாவுக்கும் சம்பந்தன் ஐயாவுக்குமிடையில் முரண்பாடுகள், ஐக்கியமின்மை…. மறுபக்கம் பல கட்சிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் முரண்பாடுகள்… சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு கருத்தைக் கூறுகிறார். சுமந்திரன் இன்னொரு கருத்தைக் சொல்கிறார். சித்தார்த்தன் ஒரு கருத்து.. சிவாஜிலிங்கம் மற்றொரு கருத்து. இது போன்ற கிழக்கிலும் தமிழ் அரசியல் கட்சி முக்கியஸ்தர்களிடையே பல்வேறு முரண்பாடான கருத்துகள் உள்ளன. 

ஆனால் தமிழர்களின் உரிமைகள், அபிலாஷைகள் நலன்கள் என்று வரும் போது தங்களுக்கிடையிலான முரண்பாடுகள் அனைத்தையும் களைந்து நாங்கள் தமிழர்கள் என்ற விடயத்தில் உடன்பாடு கண்டவர்களாக ஒருமித்துச் செயற்படுகிறார்கள்.குரல் கொடுக்கிறார்கள். வெற்றியடைகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடும் விமர்சனத்துக்கு உட்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட தமிழர் நலன் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் முன்னெடுப்புகளுக்கு ஓர் ஊன்று கோலாக நிற்கிறார்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பாத்திரமும் முக்கியமானது. அவ்வாறிருந்தும் அவர்கள் ஆட்சியில் எந்த அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ளாமல் தான் சார்ந்த சமூகத்தின் அபிலாஷைகள், உரிமைகள், இலக்குகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து பயணித்து அதில் வெற்றி பெற்று வருகின்றனர். 

அதே போன்று இன்று அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதா கிருஷ்ணன் ஆகியோரையும் எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் இரு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மலையக மக்களின் நன்மை கருதி, தங்களது தாய் கட்சிகள் வேறாக இருக்க, வேறொரு அமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுகிறனர். அதன் மூலம் இன்று மலையக மக்களின் அனைத்து தேவைகளையும் அவர்கள் இந்த நல்லாட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்ளக் கூடியவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், கட்சிகள் வேறு, கருத்து முரண்பாடுகள் வேறு என்ற நிலையில் சமூகம் என்று வரும் போது அவர்களது செயற்பாடுகள் எவ்வாறு அமைக்கின்றன என்பதனை எங்களது முஸ்லிம் தலைமைகள் இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளன.

சின்னஞ் சிறிய விடயங்களாக என்னால் நோக்கப்படும் சாய்ந்தமருதுக்கு ஒரு உள்ளூராட்சி மன்றத்தை ஒற்றுமைப்பட்டு பெற்றுக் கொடுக்க முடியாத, மாயக்கல்லிமடு புத்தர் சிலையை ஒரே குரலில் கடுமையாகக் கூறி அகற்றச் செய்ய முடியாத, வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றும் விடயத்தில் ஒருமித்து குரல் கொடுக்க முடியாத எமது தலைமைகளால், எமது உரிமைகள், அபிலாஷைகள் என்ற பாரிய பொறுப்புமிக்க விடயங்கள் நிறைவேற்றப்படாது அல்லது பறி போகின்ற நிலைமைகள் வரும் போது அவற்றை எமது முஸ்லிம் தலைமைகள் ஒன்றித்து குரல் கொடுத்து பெற்றுத் தருவார்கள் என இன்னும் நம்பிக் கொண்டிருந்தால் அது எமது வடிகட்டிய முட்டாள் தனமே. 

எனவே, பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளை ஒன்றிணையச் செய்வதே சமூகம் என்ற வகையில் எம் முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். அதனை முன்னின்று செய்வது யார்? முஸ்லிம் மதத் தலைமைகளே, அமைப்புகளே, புத்தி ஜீவிகளே, சமூக ஆர்வலர்களே சிந்தியுங்கள், செயற்படுங்கள். 

ஏனெனில், நாங்கள் மிகுந்த கடினமானதொரு எதிர்காலத்தை துன்பியலுடன் முகங்கொள்வோராக உள்ளோம் என்பதனை மனதில் கொள்ளுங்கள்

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.