தேங்காய் ஆய்வதற்காக வீதியோரம்
சிலர் கத்தித்திரிவார்கள்.சத்தம் கேட்டு நாம் அவர்களை அழைக்கிறோம்.அவர்களிடம் பேரம் பேசுகிறோம். வேலை முடிந்தவுடன் அவர்களோடு பேசிய கூலியைக் கொடுத்து அனுப்புகிறோம்.நாம்தான் எஜமான்.நாம்தான் தென்னை மரத்தின் சொந்தக்காரர்கள்.நாம் தெரிவு செய்த தற்காலிக ஊழியர்கள்தான் தேங்காய் ஆய்பவர்கள்.
அரசியல்வாதிகளும் தேங்காய் ஆய்பவர்களும் ஒன்றுதான்.அவர்கள் தேங்க்காய் ஆய்வதற்குப் பதிலாக உங்கள் அரசியலை உரிமைகளைப் பிரதிநிதித்துவம் செய்யவா என்று வீதியில் கத்தித்திரிவார்கள்.நீங்கள் சரி
ஐந்து அல்லது ஆறு வருடங்கள் எங்களைப் பிரதி நிதித்துவம் செய் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.தேங்காய் கொய்பவனுக்கு கூலி பேசுவது போல உங்கள் வாக்கைக் கூலியாக அரசியல் வாதியிடம் பேசுகிறீர்கள்.
அதற்குப் பகரமாக உங்கள் உரிமையைப் பெற்றுத்தருவதாக உங்களிடம் ஒப்பந்தம் செய்கிறான்.தேங்காய் ஆய்பவன் தேங்காய் ஆய்ந்து தருவதாக ஒப்பந்தம் செய்பது போல.
உங்கள் கூலிக்கு உடன்பட்ட தேங்காய் ஆய்பவன் உங்கள் மரத்தில் ஏறுகிறான்.உங்கள் வாக்குக்கு உடன்பட்ட அரசியல்வாதி பாராளுமன்றத்திற்குப் போகிறான்.தென்னை மரம் உங்கள் சொத்து.பாராளுமன்றமும் உங்கள் சொத்து.
இப்பொழுது அவன் தேங்காய் ஆய்கிறான்.நீங்கள் கூலியைக் கொடுக்கிறீர்கள்.அவன் போய்விடுகிறான்.நீங்கள் தேங்காயால் பயனடைகிறீர்கள்.
அரசியல்வாதி உங்கள் உரிமைகளை வென்று தருகிறான்.அவனுக்கு வாக்களிக்கிறீர்கள். பெற்றுக் கொண்ட உரிமைகளைக் கொண்டு நீங்கள் மகிழ்ச்கியாக வாழ்கிறீர்கள்.
தேங்காய் ஆய்பவன் சரியாகத் தேங்காய் ஆயவில்லை என்றால் அவனை விரட்டி அடிக்கிறீர்கள்.அவனுக்குக் கூலி கொடுக்கமாட்டீர்கள்.அவன் உங்கள் வீதியில் இன்னொரு முறை வந்தால் அவனை உள்ளே எடுக்கமாட்டீர்கள்.அவனை வைத்து தேங்காய் ஆய வேண்டாம் என்று உங்கள் அயலவருக்கு எச்சரிப்பீர்கள்.
ஏனெனில் உங்கள் தென்னை மரம்.உங்கள் கூலி,உங்கள் முற்றம்.உங்கள் தேங்காய்.ஆய்பவன் உங்கள் தொழிலாளி,நீங்கள்தான் எஜமானன்.
அரசியல்வாதி சரியாக உங்கள் உரிமைகளை ஆய்ந்து தரவில்லை என்றால் அவனை நீங்கள் விரட்டிப்பதில்லை ஏன்?
அவனுக்கு நீங்கள் மீண்டும் மீண்டும் வாக்களிப்பது ஏன்?
அவன் வாக்குக்கேட்டு மீண்டும் உங்கள் வீட்டடிக்கு வந்தால் நீங்கள் அவனை வரவேற்பதேன்?
அவனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உங்கள் அயலவனுக்கு நீங்கள் கூறாதது ஏன்?
இதுவும் உங்கள் பாராளுமன்றம்.உங்கள் வாக்கு.உங்கள் நாடு.உங்கள் உரிமை.அரசியல்வாதி உங்கள் தொழிலாளி.நீங்கள்தான் எஜமான்.
நீங்கள் தேங்காய் ஆய்பவனுக்கு என்ன மரியாதை கொடுக்கிறீர்களோ அதுதான் அரசியல்வாதிக்கும்.
ஆனால் அப்படி நடப்பதில்லையே ஏன்?எப்போதாவது சிந்தித்திருகிறீர்களா என் சமூகமே?
எப்போது நீங்கள் ஒரு அரசியல்வாதியை ஆண்டவனாகப் பார்க்காமல் தேங்காய் ஆய்பவனாகப் பார்க்கிறீர்களோ அப்போதுதான் நீங்கள் விழித்துக்கொள்வீர்கள்.