எந்த கட்சியும் SLFP யின் தலையீடு இன்றி உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது

எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்பட திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

  முன்னர் நடைமுறையில் இருந்த முறைமைக்கு அமைய ஒரு உள்ளூராட்சி சபையில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் கட்சிக்கே தலைவரை தெரிவு செய்ய முடியும்.தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டம் காரணமாக பெரும்பான்மை உறுப்பினர்களை பெறும் கட்சிக்கு தலைவரை தெரிவுசெய்ய முடியாது.

இந்த நிலையில், பிரதேச சபை தலைவர், நகர முதல்வர் மற்றும் மேயர் பதவிகளை பெற அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெற வேண்டும் இவ்வாறான நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகிய கட்சிகள் எப்படியான வாக்கு வங்கியை கைப்பற்றினாலும் சிறிய உள்ளூராட்சி சபைகளிலேயே அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெற முடியும்.ஏனைய உள்ளூராட்சி சபைகளில் தலைமைத்துவம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையே முடிவுகளை எடுக்கும்.இந்த சூழலில் எந்த கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலையீடு இன்றி உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.