எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இனக்குழுமமான முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என காத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் சில உள்ளடக்கங்கள் முஸ்லிம்களுக்கு வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகவே உணரப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம்கள்; இருதலைக் கொள்ளியாக பல இழப்புக்களை சந்திக்க நேரிட்டமைதான் வரலாறு. இனக்கலவரங்களாலும் இனத்துவ நெருக்குவாரங்களாலும் வடக்கு, கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்கள் பெரும் இழப்புக்களைச் சந்தித்திருப்பது போல, வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் இனப்பிரச்சினையாலும் அதன்பின்வந்த ஆயுத மோதலாலும் அநாவசியமான இழப்புக்களை பெற்றிருக்கின்றார்கள். எனவே, அரசியலமைப்பின் ஊடாவோ அல்லது வேறு வடிவிலோ இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் அதில் தம்முடைய அபிலாஷைகளும் உள்வாங்கப்படும் என்று முஸ்லிம்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக முன்வைக்கப்படும் அதிகாரப் பகிர்வும் தீர்வுத்திட்டமும் புரையோடிப் போன ஒட்டுமொத்த இனப்பிரச்சினைக்கும் முடிவுகட்டுவதற்கான ஒரு முயற்சியாகும். எனவே இனமோதலுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்துவதாகவே இது அமைய வேண்டும். அதுமட்டுமன்றி, தற்போதிருக்கின்ற அரசியலமைப்பை முற்றாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடனேயே புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கப்படப் போகின்றது. எனவே, இதிலும் எந்த இனக்குழுமத்திற்கும் தவறிழைக்கப்பட முடியாது.
ஆனால், அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்களை சுக்குநூறாக்கி இருக்கின்றன. முஸ்லிம் அரசியலின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அந்த சமூகத்தை நம்பவைத்து ஏமாற்ற முனைகின்றனரோ என்ற ஆத்திரமும் வெஞ்சினமும் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இடைக்கால அறிக்கை
2016 மார்ச் 9ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின் வழிநடாத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. மொத்தமாக 116 பக்கங்களைக் கொண்டுள்ள இவ்வறிக்கையானது தற்போதைய அரசியலமைப்பின் அத்தியாயம் 1, 2 இனால் உள்ளடக்கப்படும் விடயங்கள், அதிகாரப் பகிர்வுக் கோட்பாடுகள், அரச காணி, மாகாண நிரல் பற்றி மத்திய அரசாங்கம் சட்டம் இயற்றுதல், பிரதான ஆட்புலம், இரண்டாம் சபை, தேர்தல் முறைமை, ஆட்சித்துறை, அரசியலமைப்புப் பேரவை, பெண்களின் பிரதிநிதித்துவம், பொதுமக்கள் பாதுகாப்பு, வழிப்படுத்தற்குழு உறுப்பினர்களின் அவதானங்களும் கருத்துக்களும் என 12 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
தனிநாட்டுக் கோரிக்கைiயும் நாடு பிரிக்கப்படுவதையும் உத்தேச அரசியலமைப்பு தடுக்கின்றது. உச்சபட்ச அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்தும் இடைக்கால அறிக்கை, அதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக மாகாணங்கள் இருக்கும் எனக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு இன்னும் வரவேற்கத்தக்க பல ஏற்பாடுகளை கொண்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும், அதிகாரப் பகிர்வுக் கோட்பாடுகள் என்ற பிரிவின் 2ஆம் உப பிரிவில் மாகாணங்களின் இணைப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளே தற்போது முஸ்லிம்கள் மத்தியில் மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அந்த உப பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
மாகாணங்களை இணைத்தல் தொடர்பான ஏற்பாடுகளுக்கு வழிப்படுத்தும் குழுவின் மேலதிக பரிசீலனை தேவைப்படுகின்றது. பின்வரும் தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
இரண்டு அல்லது அதிகமான மாகாணங்களை தனிஅலகாக உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசியலமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் உரிய மாகாண சபைகளில் மக்கள் தீர்ப்பொன்றும் தேவைப்படுத்தப்படும் என்ற மேலதிக தேவையுடன், வைத்திருக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்யலாகாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கும்.
வழக்கமான சட்ட ஆவணங்களைப் போல சாதாரண பொதுமக்களுக்கு இலகுவாக விளங்க முடியாத வாசகங்களாக இவை காணப்படுவதாக பலரும் குறிப்பிடுகின்றனர். சட்டநுணுக்கங்களும் மயக்கமான, உட்கிடையான அர்த்தங்களும் இதில் இருக்கின்றன. எவ்வாறிருப்பினும், துறைசார்ந்தோர் அதிலுள்ள உள்ளர்த்தங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இதில் பொதுவாகக் கூறப்படும் அபிப்பிராயம், மேற்குறிப்பிடப்பட்ட மூன்று ஏற்பாடுகளும் மாகாணங்களின் இணைப்பு தொடர்பாக தேர்ந்;தெடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் என்பதாகும். அதாவது, மாகாணங்களை இணைக்கின்ற வேளையில் சர்வஜன வாக்கெடுப்பை கட்டாயப்படுத்தல், இணைப்பையே நிராகரித்தல் மற்றும் அரசியலமைப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனியொரு ஆட்புல எல்லையாக அங்கீகரித்தல் என்ற ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றை இறுதியாக உருவாக்கப்படும் அரசியலமைப்புக்காக தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனியொரு மாகாணமாக அரசியலமைப்பு அங்கீகாரமளிக்கும் என்பதன் உள்ளர்த்தம், அரசியலமைப்பின் துணைகொண்டு இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்படும் அல்லது இணைந்ததாக கருதப்படும் என்பதே ஆகும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, வடக்கும், கிழக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிகமாகவேனும் இணைக்கப்படும் உள்நோக்கத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சட்டத்தில் இருக்கின்ற நுணுக்கங்களின்படி முதல் இரு யோசனைகளும் பிற மாகாணங்களுக்கே பிரயோகிக்கப்படலாம் என்ற அபிப்பிராயமும் முன்வைக்கப்படுகின்றது. இது தவிர வேறு வியாக்கியானங்களும் பரவலாக சுழற்சிக்கு விடப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் நிலை
தமிழ் மக்கள் ஐம்பது வருடங்களாக தமது உரிமைக்காக போராடி வருகின்றனர். ஆயுதப் போராட்டம் தோல்வியுற்ற பிறகு தனிநாட்டுக் கோரிக்கை சாத்தியமற்றுப் போனது என்றாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும், இணைந்த வடகிழக்கிலேயே தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்றும் பல வருடங்களாக கோரி வருகின்றது.
எனவே, தமிழர்கள் இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டுமென வேண்டுவதோ, இணைந்த வடகிழக்கில் தீர்வுத்திட்டம் கோருவதோ பிழையென்று யாரும் சொல்ல முடியாது. உண்மையில் இந்த தைரியத்திற்காக, இவ்வளவு காலமும் தமது கொள்கையில் நிலைமாறாமல் இருக்கின்றமைக்காக தமிழர் அரசியலைப் பாராட்ட வேண்டும். ஆனால் இதிலிருக்கின்ற பிரச்சினை மாகாணங்களின் இணைப்புப் பற்றிய முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள், தீர்வில் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் கவனத்திற் கொள்ளப்படவில்லை என்பதாகும்.
இடைக்கால அறிக்கையில் உள்ள மேலே குறிப்பிடப்பட்ட 3 ஏற்பாடுகளுள் ‘வடக்கையும் கிழக்கையும் இணைத்தல்’ என்ற விடயம் மிக உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். அத்துடன் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் ஆதரவு தர வேண்டுமென்றும் த.தே.கூட்டமைப்பு தொடர்ந்தும் முஸ்லிம்களை நோக்கி கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றது. அவ்வாறு இணைக்கப்படாது என்று அரசாங்கமோ, தமிழ் தேசியமோ அன்றேல் முஸ்லிம் பிரதான கட்சிகளோ இதுவரை கூறவும் இல்லை.
அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்ட உப குழுக்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கம் வகிப்பது மட்டுமன்றி அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கும் பிரதான இரு முஸ்லிம் கட்சித் தலைவர்களான றவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோர் வழிநடாத்தல் குழுவில் இடம்பிடிக்கின்றனர். இருப்பினும், முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு திருப்திப்படுமளவுக்கு இதில் உள்வாங்கப்படவில்லை.
சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் காப்பீடான பல ஏற்பாடுகளை இடைக்கால அறிக்கை உள்ளடக்கியிருக்கின்ற போதிலும், முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கள் பிரதிபலிக்கவில்லை. தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதற்கான ஒரு அடிப்படை ஏற்பாட்டை இது உள்ளடக்கியுள்ளது என்றால், தமிழ் தேசிய அரசியல்வாதிகள் இணக்க அரசியலில் வெற்றி கண்டுள்ளனர் என்பதே அதன் அர்த்தமாகும். இருபத்தைந்து வருட முஸ்லிம்களின் இணக்க அரசியலால் செய்ய முடியாதததை இரண்டரை வருடங்களுக்குள் தமிழர் அரசியல் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.
கட்சிகளின் காட்சி
இந்த விடயத்தில் 21 முஸ்லிம் எம்.பி.க்களும் தவறிழைத்திருக்கின்றனர். இதில் யாரும் விதிவிலக்கல்லர். குறிப்பாக பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் மக்கள் காங்கிரஸூம் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. மூன்று பிரதான விடயங்களில் இக்கட்சிகள் தவறிழைத்திருக்கின்றன எனலாம். முதலாவது, வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதை வழிநடாத்தல் குழுவின் முன்மொழிவாக முன்னகர்த்தாமல் தவறிழைத்துள்ளன. மற்றையது, இவ்விரண்டும் இணைந்தால் முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகா, முஸ்லிம் மாகாணமா என்பதைச் சொல்லாம் பிழைவிட்டுள்ளன. அடுத்தது, கரையோர மாவட்டத்தை உறுதிப்படுத்த தவறியமையாகும்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை வழிநடாத்தல் குழுவின் யோசனையாக வெளிப்படுத்தச் செய்வதில் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் பொதுவான தவறை விட்டிருந்தாலும், இடைக்கால அறிக்கையில் பின்னிணைப்புச் செய்யப்பட்டுள்ள கட்சிகளின் தனிப்பட்ட கருத்தறிக்கையில் வடக்கு, கிழக்கு தனித்தனி மாகாணமாக இருக்க வேண்டும் என்று அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. கரையோர நிர்வாக மாவட்டக் கோரிக்கையை ‘ஒலுவில் மாவட்டம்’ என்பதாக அக்கட்சி முன்வைத்துள்ளது. ஆனால், இந்தக் கட்சி முஸ்லிம்களுக்கான தனி அதிகார அலகு பற்றி எந்த முன்மொழிவையும் அறிக்கையிடவில்லை.
இதேவேளை, றவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தமது தனிப்பட்ட அறிக்கையாகக் கூட வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதையோ முஸ்லிம் தனி அலகையோ அன்றேல் கரையோர மாவட்டத்தையோ முன்மொழியவில்லை என்பது கவனிப்பிற்குரியது. கூட்டு யோசனையாக முன்வைத்துள்ளதாக குறிப்பிடும் ‘நாட்டில் 9 மாகாணங்கள் இருக்கும்’ என்ற முன்மொழிவை இவ்விடத்தில் ஏற்க முடியாது. ஏனெனில் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்குமா பிரிந்திருக்குமா என்று அதில் குறிப்பிடப்படவில்லை.
ஹக்கீமும் ஹரீஸூம்
இவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் மு.கா.வின் பிரதித்தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவசரமாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். கட்சி மீதும் கட்சித் தலைவர் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதும் இமேஜை காப்பாற்றுவதுமே இதன் நோக்கமாக இருந்தது. இங்கு கேள்விகளுக்கு பதலளித்த ஹரீஸ், ‘வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடு. எனவே அதற்கு கட்சி ஒருபோதும் சம்மதிக்காது. அப்படி ஒரு நிலைவந்தால் நான் பதவி துறப்பேன்’ என்று சொன்னார்.
அதுமட்டுமன்றி, கரையோர மாவட்டம் தொடர்பான யோசனையை மு.கா. முன்வைத்ததாகவும் இருப்பினும் அது இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டதுடன், அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் ஆவணத்தையும் வாசித்துக் காட்டினார்.
இந்நிலையில், இது பற்றி அரசியலமைப்புச் சபையின் முக்கிய உறுப்பினரும் எம்.பி.யுமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ணவிடம் கேசரி சார்பாக வினவிய போது, ‘மு.கா.அவ்வாறான ஒரு கோரிக்கையை முன்னர் ஒரு தடவை முன்வைத்திருந்தது. ஆனால், இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை பரிசீலித்து தமது அபிப்பிராயங்களை முன்வைக்குமாறு கோரியபோது அதனை சமர்ப்பிக்கவில்லை. எனவேதான் அது உள்ளடக்கப்படவில்லை. முன்னைய அறிக்கையே உள்ளடக்கப்படும் என்று அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். எவ்வாறிருப்பினும், பிரதமரின் ஆலோசனையின் பேரில் இறுதி அறிக்கையில் மு.கா.வின் கோரிக்கையை உள்ளடக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றார்.
இடைக்கால அறிக்கையில் முஸ்லிம்கள் அதிருப்தியுற்றமை, அந்தப்பின்னணில் கிழக்கில் எழுந்த அதிர்வலைகள் மற்றும் பிரதியமைச்சர் ஹரீஸின் காட்டமான அறிக்கை என்பன மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு ஒருவித ஆத்திரத்தை உண்டுபண்ணியிருப்பதை அவரது பேச்சுச்களில், அறிக்கைகளில் தொனிக்கின்றது.
‘வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாது என கட்சியின் பிரதித் தலைரவான ஹரீஸ் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அது மு.கா.வின் நிலைப்பாடு அல்ல. சிலர் இவ்விடயத்தை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய முற்படுகின்றனர். வடக்கு, கிழக்கை இணைக்க விடமாட்டோம் என ஓரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கிமானதல்ல. அதற்காக பேச்சுக்கள் விட்டுக் கொடுப்புக்கள் செய்யப்பட வேண்டும். மறைந்த தலைவர் அஷ்ரஃப் வடக்கும் கிழக்கும் இணைந்திருந்தால் முஸ்லிம் தனியலகு வேண்டுமென்று ஒரு முடிவை எடுத்திருந்தார். எனவே, இவ்விரு மாகாணங்களும் இணைகின்ற போது முஸ்லிம் தனியலகு கோரிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என்று றவூப் ஹக்கீம் சொல்லியுள்ளார்.
இப்போதென்றாலும் மு.கா. தலைவர் இவ்வாறு அறிவித்திருப்பது நல்லதே. என்றாலும் அவர் மறைமுகமாக பிரதியமைச்சர் ஹரீஸையும், வேறொரு உரையில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவையும் சாடி இருப்பதை காண முடிகின்றது. அதாவது, தலைவரைக் காப்பாற்ற முயன்ற பிரதித் தலைவர் ஹரீஸ் எடுத்த நிலைப்பாடு தனது நிலைப்பாட்டுக்கு முரணானது என்பதால், அவரது கருத்தையே தனிப்பட்ட கருத்து எனச் சொல்லி மழுங்கடித்திருக்கின்றார். இது கிழக்கு முஸ்லிம்களிடையே இருந்த கொதிநிலையை மேலும் அதிகரித்திருக்கின்றது.
அடிமைச் சாசனம்
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கும், கிழக்கும் தற்காலிகமாகவே இணைக்கப்பட்டது. ஆனால் அந்த ‘தற்காலிகம்’ முடிவுக்கு கொண்டுவரப்பட 19 வருடங்கள் சென்றன. இவ்வாறு இரு மாகாணங்களும் இணைந்திருந்த போது முஸ்லிம்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலேயே, இம் மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைக்கப்படக் கூடாது என்றே முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டதை முஸ்லிம்களின் முதுகில் குத்தப்பட்ட அடிமைச் சாசனம் என்று அஷ்ரப் சொன்னார். அவ்வாறு இணைந்திருப்பதென்றால் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் அல்லது அகன்ற தென்கிழக்கு அலகு முஸ்லிம்களுக்கு வேண்டும் என்று கோரினார். அது அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு மாகாண சபைக்கு ஒத்த அலகாகும். உண்மையில் இன்றைய நிலரப்படி, இணைந்தாலும் பிரிந்;தாலும் முஸ்லிம்களுக்கு அவ்வலகு அவசியம் என்பதே யதார்த்தமும் ஆகும்.
எனவே, கிழக்கு முஸ்லிம்களின் விருப்பப்படி வடக்கு, கிழக்கு பிரிந்திருக்க வேண்டுமென மு.கா. தலைவர் ஏன் வலியுறுத்தவில்லை என்பதும் அவர் கிழக்கு முஸ்லிம்களை விட யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்பதும் கட்சிக்குள்ளேயே முன்வைக்கப்படும் கேள்வியாகும். அதேபோன்று, ஹரீஸ் பேசத் தொடங்கிய பிறகு தனி அலகுபற்றி பேசுகின்ற மு.கா. தலைவர், அப்படியென்றால் அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கையில் அவ்வாறான ஒரு கோரிக்கையை ஏன் முன்வைக்கவில்லை? கிழக்கு மாகாண சபையிலோ பாரளுமன்றத்திலோ பிரேரணை சமர்ப்பிக்கவில்லை? என்பது கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தால் முன்வைக்கப்படும் அதைவிடப் பெரிய வினாவாகும்.
தென் மாகாண மக்கள் விரும்புகின்றார்கள் என்பதற்காக மேல் மாகாண மக்களின் விருப்புக்கு மாறாக அதனை எவ்வாறு தெற்குடன் இணைக்க முடியாதோ அதுபோலவே, கிழக்கு முஸ்லிம்களின் சம்மதம் இன்றி வடக்குடன் கிழக்கை இணைக்க முடியாது. அவ்வாறு ஒரு அவசியம் ஏற்பட்டால் அகன்ற தனியலகு அல்லது முஸ்லிம் மாகாணம் என்ற அடிப்படையிலேயே உடன்பாடு வழங்கப்பட வேண்டுமே தவிர முஸ்லிம் முதலமைச்சர் என்ற மாயைக்குப் பின்னால் போக முடியாது. அதுகுறித்த தீர்மானத்தை இவ்விரு மாகாணங்களில் உள்ள முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளே பேசித் தீர்மானிக்க வேண்டும். அதற்கு வெளியிலுள்ளோர் அதில் மூக்கை நுழைக்கத் தேவையில்லை.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு என்பது இன்னும் பல தசாப்தங்களுக்கு இந்த நாட்டின் போக்கையும் முஸ்லிம்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும். எனவே முஸ்லிம்களின் அபிலாஷையை நிவர்த்தி செய்ய வேண்டிய கூட்டுக் கடமை முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோருக்கும் இருக்கின்றது. உத்தேச அரசியலமைப்பு, தீர்வுத்திட்டம் தொடர்பில் முஸ்லி;ம்களின் அபிலாஷைகளை பேச வேண்டிய இடத்தில் பேசாமல், யோசனை சமர்ப்பிக்க வேண்டிய இடத்தில் அதைச் செய்யாமல் வெறும் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதால் ஆனபயன் ஒன்றுமில்லை.
கனவு மெய்ப்பட வேண்டும் !
ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 08.10.2017)