தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐ. தே. கட்சியுடன் பேச்சுவார்தை:மனோ கணேசன்

எதிர்வரும் ஜனவரியில் நாடெங்கும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பமாயுள்ளன. 

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார். 

 


தமிழ் முற்போக்கு கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் எம்பீக்கள் திலக்ராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார் மற்றும் சண். பிரபாகரன் ஆகியோர் அடங்குகின்றனர். 

நுவரேலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளே தமிழ் மக்கள் சேர்ந்து வாழும் அனேகமான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட நாம் முடிவு செய்துள்ளோம். 

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் தலைமை கட்சி என்ற அடிப்படையிலேயே இந்த பேச்சுகள் நடைபெறுகின்றன. 

கடந்தகால தேர்தல்களில் ஐதேகவின் தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்த ஒருசில இடங்களில் அதே உறுப்பினர்கள் போட்டியிட உடன்படும். 

அதேவேளை ஏனைய தமிழ் பெரும்பான்மை வட்டாரங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களே போட்டியிடவேண்டும் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடாகும். 

கூட்டு சேர்ந்து போட்டியிடுவதில் உரிய புரிந்துணர்வு இல்லையெனில் நாடெங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து களமிறங்கவும் தயங்காது. 

காலத்தின் தேவை கருதி ஐதேகவுடன் கூட்டாக போட்டியிட்டாலும் அல்லது தனித்து எங்கள் சின்னத்தில் போட்டியிட்டாலும் எங்கள் தனித்துவம் எப்போதும் தலை நிமிர்ந்து நிற்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.