விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து பருவக்காலங்களும் உக்கிரமாகவே உள்ளது.
இந்நிலையில், இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சகட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து இதுவரை ஆந்திர மாநிலத்தில் மட்டும் 852 பேர் பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 202 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 130 பேரும், விசாகப்பட்டினத்தில் 112 பேரும், கிழக்கு கோதாவரியில் 90 பேரும், விஜயநகரத்தில் 78 பேரும், நெல்லூரில் 74 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 49 பேரும், சித்தூரில் 29 பேரும், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 25 பேரும், கடப்பாவில் 22 பேரும், கர்நூலில் 17 பேரும், அனந்தபூரில் 14 பேரும், மேற்கு கோதாவரியில் 10 பேரும் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், வெயிலின் தாக்கத்தால் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்குமாறு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.