பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி ராவல் பிண்டியில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார்.
அவரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பதவி ஆதாயத்துக்காக பெனாசிர் பூட்டோவை அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியே கொலை செய்துள்ளார் என முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான பர்வேஷ் முஷரப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பெனாசிர் பூட்டோவின் குழந்தைகள் பிராவல், பக்தாவர் மற்றும் ஆஷிபா பூட்டோ மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு ஒரு வீடியோ மூலம் இத்தகவலை தெரிவித்துள்ளார். இதேபோன்றுதான் 2006-ம் ஆண்டு பெனாசிரின் சகோதரர் முர்தாசாலையும் ஆசிப் அலி சர்தாரி கொலை செய்தார்.
அவர் மீது முர்தாசாவின் மனைவி சின்வா அவரது குழந்தை பாத்திமா ஆகியோர் குற்றம்சாட்டினார். ஆனால் 2008-ம் ஆண்டில் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
பதவி ஆதாயத்துக்காக அவர் பெனாசிர் பூட்டோவை கொலை செய்தார். அவர் 5 ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்தார். அப்போது அவரது கொலை வழக்கின் மீது அவர் எடுத்த நடவடிக்கை என்ன?
ஆனால் நான் பதவியில் இருந்த போது பெனாசிர் கொலை வழக்கு குறித்து பலவிதமான கோணங்களில் விசாரணை நடத்தினேன் என்றார்.