அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவு

க.கிஷாந்தன்

வெலிமடை – அப்புத்தளை பிரதான வீதியில் 3ம் மற்றும் 4ம் கட்டைப்பகுதிக்கு இடைப்பட்ட பகுதியின், அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவதோடு நுளம்புகளும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெலிமடை பிரதேச சபையால் குறித்த இடத்திற்கு அருகாமையில் அறிவுறுத்தல் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சூழலில் வீசியெறிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களுக்குள்ளாவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இப்பகுதிகளில் செல்லும் சுற்றுலா பிரயாணிகள் தங்களது உணவு பொருட்களை ஆங்காங்கே கொட்டி எரிந்து வருகின்றனர். இதன் போது கட்டகாலி நாய்கள் மற்றும் பறவைகள் ஆகியன உணவுகளை உண்ணும் அதேவேளை அவ்விடங்களிலிருந்து தூக்கி செல்வதால் வீதிகள் மாசடைவதுடன் குப்பைகள் வீதிகளில் பரவக்கூடிய நிலை ஏற்படுகின்றது. அத்தோடு அரச வனப்பகுதியும் நாசமாக்கப்படுகின்றது.

மேலும் பயணிகள் மற்றும் குறித்த பிரதேசவாசிகள் வீசிச் செல்லும் யோகட் கோப்பைகள், பொலித்தீன் பைகள் ஆகியவற்றில் நீர் நிறைந்து நுளம்பின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்ற அதேவேளை, பிரதேசத்தில் துர்நாற்றம் வீசிவருவதாக தெரிவிக்கும் மக்கள், இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

இப்பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பிரயாணிகள், ஏனைய பிரதேசவாசிகள் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்வார்களாயின் இவ் சூழலை பாதுகாப்பது சிரமம் அல்ல.