ரக்பி வீரர் வசீ்ம் தாஜூதீன் படுகொலை சம்பவம் தொடர்பில் உயர்மட்ட கைதுகள் தவிர்க்க முடியாதது என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், இந்த கொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசீ்ம் தாஜூதீன் படுகொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிடம் நேற்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காது இருந்துள்ளதாகவும், எனினும் சில கேள்விகளுக்கு “தனக்கு ஒன்றும் தெரியாது” என்று பதிலளித்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
தாஜூதீன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும், டிபென்டர் வாகனம் தொடர்பான விசாரணைக்கு நேற்றுக்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு ஷிரந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.
செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்பட்ட குறித்த வாகனமானது, ஷிரந்தி ராஜபக்ச தலைமையிலான சிரிலியே சவிய அமைப்பினால் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு முன்னால் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.