20ஐ கைவிட்டுவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முடிவை அரசு எடுக்கும்..?

20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய முன்னணி அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இன்றைய தினம் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில், மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் வழங்கும் 20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டவரைபை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்து அதற்குரிய அனுமதியைப் பெற்றிருந்தார்.

இதையடுத்து அது வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது.

இந்த அரசியல் சட்டவரைபுக்கு, அரசியல் கட்சிகளும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் எதிர்ப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. இதனால், பிரதமர் கடும் அதிருப்தியில் இருக்கின்றார்.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று முடிவடைந்த பின்னர் மதிய உணவுடன் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பங்காளிக் கட்சிகன் தலைவர்களை அலரிமாளிகையில் சந்தித்து, 20ஆவது திருத்தச் சட்டம் பற்றி பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது.

அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் பேச்சு நடத்தினார்.

அமைச்சரவையில் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு எதிராக மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுபற்றி அக்கட்சியிடம் விளக்கம் கோரப்படும்.

எனவே, ஜனாதிபதி தலைமையில் இன்று புதன்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள 20ஆவது அரசமைப்பு திருத்த சட்டவரைபுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 10 மனுக்களைத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் 20ஆவது அரசமைப்பு திருத்த சட்டவரைபை எதிர்த்துள்ளார். எனவே, 20ஐ கைவிட்டுவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முடிவை அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.