மஹிந்த அரசின் ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட நீதிமன்றம் ? – அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட நீதிமன்றமொன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டு இரண்டரை ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதில் அசமந்த போக்கு காண்பிக்கப்பட்டு வருகின்றது என பல அமைச்சர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட நீதிமன்றமொன்றை நிறுவ வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், அரசியல் அமைப்பில் திருத்தம் செய்வதன் மூலம் இவ்வாறான நீதிமன்றமொன்றை அமைக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.