மிகவும் உருக்கமான பேச்சினைத் தொடர்ந்து அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த ரவி

 இன்றைய நாடாளுமன்ற அமர்விலேயே இந்த அறிவிப்பை பிரதமர் உட்பட ரவி கருணாநாயக்க இருவரும் தெரிவித்தனர். 

மிகவும் உருக்கமான பேச்சுடன் தனது உரையை முன்வைத்த ரவி கருணாநாயக்க, தன்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருந்தார்.

                                                                  FILE IMAGE

நாட்டில் மீண்டும் குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், அரசாங்கத்தை பாதுகாப்பதற்குமே தான் பதவி விலகியதாகவும், தாம் குற்றமற்றவர் என்பது விரைவில் வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அவர் இன்று பதவி விலகியுள்ளார். 

முன்னதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். 

இந்நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்த ரவி கருணாநாயக்க தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்திருந்தார். 

அத்துடன், தான் பதவி விலகுவதாக குறிப்பிட்ட அவர் நாடாளுமன்றில் பின் வரிசையில் அமர்வதாகவும் கூறியுள்ளார்.