கட்டார் நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் 80 நாடுகளுக்கு இலவச விசா இல்லாத நுழைவு முறையினை அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இவ்வாறு இலவச விசா முறையினை கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, கட்டாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் செலுத்தவோ தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது எனவும், பல முறை பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை, சவூதி அரேபியா, குவைட், ஐக்கிய அமீரகம், யேமன் போன்ற பல நாடுகள் இந்த சலுகை பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி கட்டார் நாட்டுடனான உறவை சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் ராஜதந்திர உறவுகளை துண்டித்தன.
இதன் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு இடையில் அசாதாரண நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.