‘முள்ளிக்குளக் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் கையளிக்கப்படவில்லை’:அமைச்சர் ரிஷாட்டிடம் கிராம மக்கள்  அங்கலாய்ப்பு

 

சுஐப். எம். காசிம்

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு நடைபெறுவதாக முள்ளிக்குள கிராம மக்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் எடுத்துரைத்தனர்.  

முள்ளிக்குளக் கிராம மக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிளை நிர்வாகிகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அந்த பிரதேசத்தில் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு குறைபாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்.

முள்ளிக்குள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அப்பையா லெம்பேட், செயலாளர் அமிர்தம் குரூஸ், உப செயலாளர் செல்வராஜ் குரூஸ், பொருளாளர் பி. சதீஸ் ஆகியோர் அடங்கிய முக்கியஸ்தர்கள் குழு அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து, ஏற்கனவே தாங்கள் விடுத்த கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றி தந்தமைக்கு நன்றி கூறியதோடு, அமைச்சரால் வெளிநாட்டு நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்ட 20 வீடுகள் வறிய மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக தெரிவித்தனர். 

அத்துடன் இன்னும் சில பாதைகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும்,  நீர்க் கஷ்டம் தங்களை வாட்டிவதைப்பதால் மேலும் பல நீர்த்தாங்கிகளை பொருத்தித்தர நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்

‘கிராம மக்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு என்றுமே நன்றி கடன்பட்டவர்களாக இருப்பர். கடந்த காலங்களில் நாங்கள் எங்களது கிராமத்திற்கு  உங்களை அழைத்திருந்தால் மேலும் பல விமோசனங்களை பெற்றிருக்கமுடியும்.  அவற்றை நினைந்து தாங்கள் தற்போது வருந்துகின்றோம்.’  என்று சுப்பையா லெம்பேட் தெரிவித்தார். 

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது,

‘துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்  உங்களிடம் வந்து நான் அரசியல் நடத்த விரும்பவில்லை. வாக்குகளுக்காகவும் உங்களுக்கு உதவி செய்யவுமில்லை நீங்கள் கடந்த காலங்களில் என்னை நெருங்குவதற்கு அச்சப்பட்டீர்கள். இப்போது உண்மையை உணர்ந்துள்ளீர்கள்.’ என்று தெரிவித்தார்.