சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்படும் இனவாத   கருத்துக்களுக்கு எதிராக விசாரணை அவசியம்: ஹிஸ்புல்லாஹ்

 
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத பிரச்சாரங்கள் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முறையான விசாரணைகள் மேற்கொள்ள சமூக ஊடகங்களின் பாவனை மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து புதிய சட்ட வரைபுகள் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  
உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரச்சாரங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக சிலர் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது, 
நாட்டில் சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நேரடி இனவாத செயற்பாடுகள் குறைவடைந்திருந்தாலும், மறைமுகமாக சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதைக் காணக்கூடியதாக உள்ளது. 
இவ்வாறான செயற்பாடுகள் இளம் சந்ததியினர் மத்தியல் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்காலத்தில் நாட்டுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே,   சமூக ஊடகங்களின் பாவனை மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து அரசு புதிய சட்டவரைபுகளைக் கொண்டுவருவதன் ஊடாக சமூக ஊடகங்களைத் துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க முடியும். 
வட மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற சில சம்பவங்களை சுட்டிக்காட்டி சில சமூக வலைத்தளங்களில் அப்பட்டமான பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயாமல் அப்படியே நம்புகின்ற இளம் சந்ததியினர் மத்தியில் இனக்குரோத கருத்துக்கள் ஆழமாக விதைக்கப்படுகின்றன. 
அவ்வாறே, முஸ்லிம்களுக்கு எதிராகவும் மிக மோசமான முறையில் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், வீடுகள், நிறுவனங்கள், காணிகளுக்கு சில கும்பல்கள் அத்துமீறி நுழைகின்றதையும் அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்கின்றதையும் காண்கின்றோம். இது நாட்டின் சட்டம், ஒழுங்கு விதிகளுக்கு முற்றிலும் முரணான செயற்பாடாகும். ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் சட்டத்தை அமுல்படுத்துகின்ற பொலிஸாரோ அல்லது வேறு அதிகாரிகள் ஊடகவோ அப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண வேண்டும். அவ்வாறு இல்லாது சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவது இன ஒற்றுமைக்கும் – நல்லிணக்கத்துக்கும் பாதகமாக அமையும். 
இதேவேளை, சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் போலி பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்டம் சரியான முறையில் இயங்கவில்லை என பாரிய குற்றச்சாட்டொன்றும் முன்வைக்கப்படுகின்றது. அதனை உண்மைப் படுத்தும் வகையில் சில சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.  பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்பதற்காக முஸ்லிம் இளைஞருக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரை விட இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக நேரடியாகவும், சமூக வலையத்தளங்களிலும் பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக எந்த சட்டமும் முறையாக இயங்கவில்லை என்பது கவலைக்குரியதாகும். 
இவ்வாறு பக்கச்சார்பான செயற்பாடுகளினால் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத கருத்துக்கள் சமூக வலையத்தளங்களில் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த ஒழுங்கு விதிகளும் பின்பற்றப்படுவதில்லை.; – என்றார்.