அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசி உரையாடல் – ரவியின் பெயர் மட்டுமல்லாது ஆளும், எதிர்க்கட்சி என 40 முக்கிய புள்ளிகள்

திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசி உரையாடல் மற்றும் குறுஞ்செய்தி பரிமாறல்களில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் மட்டுமல்லாது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என 40 நபர்களின் பெயர் விபரங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த ஆகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களிடம் பெயர்களும் மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீம், சுஜீவ சேனசிங்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரின் பெயர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களை தவிர நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகிய ராஜபக்ச குடும்பத்தினருக்கு அனுப்பிய குறுஞ் செய்தி விபரங்களும் அலோசியஸின் தொலைபேசியில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அலோசியஸின் தொலைபேசி உரையாடல் மற்றும் குறுஞ் செய்திகள் அடங்கிய 8 ஆயிரத்து 600 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை இரண்டு நாட்கள் என்ற குறுகிய காலத்தில் ஆய்வு செய்து அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மாத்திரம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் விசாரணை நடத்தியது சிக்கலுக்குரியது என அவதானிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் எந்த உண்மையுமில்லை என ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அமைச்சருக்கு எதிராக வாக்களிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவான தரப்பு தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை எனவும் பேசப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதவாக வாக்களிக்க தமக்கு விசர் எதுவும் பிடிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.