பிணைமுறி மோசடி தொடர்பில் மாதத்தின் விடுமுறை தினங்களிலும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தும்

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த மாதத்தின் விடுமுறை தினங்களிலும் தொடர்ந்து இயங்குமென ஆணைக்குழுவின் தலைவரும் உயர்நீதிமன்ற நீதியரசருமான கே.டி.சித்திரசிறி அறிவித்துள்ளார்.

பெர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் பர்னாந்து அந்த நிறுவனத்துக்கு எதிரான சாட்சியங்களின் மீதான குறுக்கு விசாரணைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருப்பதால் அது அவ்வாரம் முழுவதும் நீடிக்கக்கூடும் எனவும், அதனால் ஆணைக்குழு ஒரு சிறிய விடுமுறைக்குப் பின் விசாரணைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளை நிராகரித்த ஆணைக்குழுத் தலைவர் இந்த விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்த வாரம் நீதிபதிகள் பயிற்சித் திட்டமொன்றுக்குத் தான் பயிற்சியாளராக நேபாள நாட்டுக்குச் செல்லவிருந்த நிலையில் அந்த விஜயத்தையும் இரத்துச் செய்திருப்பதால் ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்தார்.

அத்துடன், ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினரான உயர் நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன இந்த விசாரணைகளை இயன்றவரை விரைவாக முடிப்பதில் தாங்கள் அக்கறை கொண்டிருப்பதாகவும், அது முடிந்ததும் தங்களது உயர் நீதிமன்றப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால் விடுமுறை எதுவும் வழங்கப்படமாட்டாது எனவும் அறிவித்தார்.