நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஜாதிக ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். நேற்று பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்ததாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத்தேர்தலை பொறுத்தவரையில் இனியும் காலத்தை கடத்தாது உடனடியாக தேர்தல் தினம் அறிவிக்கப்பட வேண்டும் என சந்திப்பில் கலந்துகொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
எவ்வாறு இருப்பினும் இந்த ஆண்டு டிசம் பர் மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் வாக்குறுதியளித்துள்ளனர். இந்த மாதம் 31 ஆம் திக திக்கு முன்னர் தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அரசாங்கம் இந்த விடயத்தில் கால தாமதத்தை ஏற்படுத்தாது என பிரதியமைச்சர்களான அஜித் பெரேரா, லசந்த அழகியவண்ண ஆகியோர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளனர்.
மூன்று மாகாணசபைகளின் கால எல்லை செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் முடிவுக்கு வருகின்றது. இது குறித்து நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களின் கால எல்லை முடிவடைகின்ற நிலையில் குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதா
அல்லது சகல மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரேநேரத்தில் நடத்துவதா என இதன்போது கட்சி பிரதிநிதிகளினால் வினவப்பட்டது. இதன்போது சகல மாகாண சபை தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்தை குறித்த தினத்தில் அங்கீகரிக்க வேண்டும். இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கும் தினம் செப்டெம்பர் வரையில் இழுத்தடிக்கப்படும் என்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்தவே முடியாது. டிசம்பர் மாதம் சாதாரண தரப்பரீட்சை நடை பெறும் காரணத்தினால் அந்தக் காலப்பகுதியில் தேர் தலை நடத்த இயலாது. அவ்வாறான நிலையில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தேர்தலை நடத்தவேண்டிய நிலைமை வரும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கட்சி செயலாளர்களு டனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.