புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த கோட்டபாயவைக் கைது செய்ய வேண்டாம்

புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயவைக் கைது செய்து வீண் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த அரசுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும், புலிகளுக்கும், சர்வதேச சக்திகளுக்கும் எதிரியாகத் திகழ்பவர் கோட்டபாய. அவர் புலிகளைத் தோற்கடித்தமை தான் இதற்குக் காரணம்.

இவரை எப்படியாவது கைது செய்து பழிவாங்கி விட வேண்டும் என்று இவர்கள் திட்டமிடுகின்றனர். எக்னெலிகொடவின் கடத்தலுடன் கோட்டாவைத் தொடர்புபடுத்தி அவரைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

அது முடியவில்லை. லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புபடுத்த முயற்சித்தனர். அதுவும் முடியவில்லை. சிறையில் உள்ள புலனாய்வு அதிகாரிகளை இவருக்கு எதிராகச் சாட்சி கூற வைத்துச் சிறையில் அடைப்பதற்கு முயற்சி செய்தனர்.

ஆனால், அந்தப் புலனாய்வு அதிகாரிகள் கோட்டபாயவைக் காட்டிக் கொடுப்பதற்கு மறுத்து விட்டனர். இதனால் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்க வைத்து கோட்டபாயவைக் கைது செய்து சிறையில் அடைத்து விட வேண்டும் என்று அரசு முயற்சி செய்து வருகின்றது.