அரிசி, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட 47 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் வரிவிலக்கு அளிக்க தீர்மானித்துள்ளது.
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நேற்று நடைபெற்ற வாழ்க்கை செலவு தொடர்பாக அமைச்சரவை உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களினடிப்படையிலேயே குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தற்போது நாட்டில் பல மாவட்டங்களில் நிலவும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணமளிப்பதற்கென ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக எதிர்வரும் 2 மாதங்களுக்கு 5 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொதியொன்றை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி வரிவிலக்கு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரம் வருமாறு,
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கான விசேட வர்த்தக வரி 25 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டு ஐந்து ரூபா விலைக்குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசிக்கான குறித்த 25 சதவீத புதிய வரிவிலக்கு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும்.
மேலும் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீனுக்கான விசேட வர்த்தக் வரி ரூபா 50 இனால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இறக்குமதி செய்யப்படும் மீன்வகைகளில் தலபத் மற்றும் கொப்பறா ஆகிய மீன்கள் 1 கிலோவிற்காக இதுவரையிலிருந்த 75 ரூபா விசேட வர்த்தக பொருட்கள் வரி 25 ரூபாவாக குறைக்கப்படுகின்றது. குறித்த விலைக்குறைப்பு கடற்றொழில் அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் குறித்த மீனுக்கான புதிய விலைக்குறைப்பு எதிர்வரும் 3 மாதங்களுக்கு செல்லுபடியானதாகும்.
மேலும் கோழி உணவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் சோளத்திற்கான இறக்குமதி வரி அனைத்தும் நீக்கப்பட்டு ஒரு கிலோ சோளத்திற்கு புதிய விசேட வர்த்தக வரி 10 ரூபா அமுலுக்கு வருகின்றது. இதுவரையில் சோளத்திற்காக 15 சதவீத இறக்குமதி வரியும் 15 சதவீத வற் வரியும் 7.5 சதவீத துறைமுக மற்றும் விமானநிலைய வரியும் 2 சதவீத தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரியும் 35 சதவீத செஸ் வரியும் அறவிடப்பட்டது.
குறித்த அனைத்து வரிகளையும் ஒன்று சேர்க்கும் போது இறக்குமதி செய்யப்படும் சோளம் 1 கிலோவிற்காக இதுவரையில் ரூபா 60 தொடக்கம் 70 வரையிலான தொகை வரியாக செலுத்தவேண்டி ஏற்பட்டிருந்தது. எதிர்வரும் 6 மாதகாலப்பகுதிக்கு குறித்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் சோளத்திற்காக ரூபா 10 விசேட வர்த்தக பொருட்கள் வரி மாத்திரம் அறவிடப்படும்.
மேலும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ மாவிற்கான செஸ்வரி ரூபா 25 இலிருந்து 15 ரூபா வரையில் ரூபா 10 இனால் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கோதுமைத் தானியம் மீது விதிக்கப்பட்டிருந்த வரி ஒரு கிலோவிற்கு 9 ரூபாவிலிருந்து 6 ரூபா வரையில் அதாவது 3 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இறக்குமதி வரி மற்றும் விசேட வர்த்தக பொருட்கள் வரி குறைக்கப்பட்டுள்ள அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் எதிர்வரும் தினங்களில் குறைவடையும்.
மேலும் நுகர்வோரான பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரிசி ,சீனி, கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட 47 அத்தியாவசிய பொருட்களுக்கான பல்வேறு வரிகள் நீக்கப்பட்டு இவற்றிற்காக விசேட வர்த்தக பொருட்கள் வரி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த விவசாய உற்பத்தி பொருட்கள் சந்தைக்கு வரும் சந்தர்ப்பத்தில் விவசாயிகளை பாதுகாப்பதற்காக இந்த வர்த்தக பொருட்கள் வரி அந்தந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்படும்.