மாகாண சபைகளின் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் நடத்தும் வகையில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பது ஜனநாயக விரோத செயலாகும். இதனை முஸ்லிம் முற்போக்கு முன்னணி கூட்டு எதிர்க்கட்சியுடன் சேர்ந்து எதிர்க்கிறது என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
அரசாங்கம் மாகாண சபைகளின் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் நடத்த தீர்மானித்திருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய ஆகிய மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் காலாவதியாகவுள்ளன. எனவே அம்மாகாண சபைகளின் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் இம்மாகாண சபைகளின் தேர்தலைப் பிற்போடத் திட்டமிட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாக முஸ்லிம்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாணிக்கக் கல் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. முஸ்லிம்கள் அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து விட்டார்கள்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தலும் மாகாண சபைத்தேர்தலும் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டால் அதற்கெதிராக போராட்டங்களை நடத்துவதற்கு நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.