வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 3 வட மாகாண சபை உறுப்பினர்களிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விசாரணை நடவடிக்கை கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் திட்டமிடப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் பிரிவினரால் இன்று யாழில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், யாழ். பொலிஸ் நிலையத்திலுள்ள குற்றத்தடுப்பு பிரிவிற்கு இன்று காலை 9 மணியளவில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைக்கப்பட்டு அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் எட்டாம் திகதி யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
அதில் கலந்து கொண்டிருந்த வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மே மாதம் 12 – 18 வரை இனப்படுகொலை வாரமாக கடைப்பிடிக்குமாறும், அந்த வாரத்தில் மேற்கொள்ளப்படவிருந்த அரச தலைவரின் முல்லைத்தீவு விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியில் சில அமைப்புக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அவருக்கு கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதை அவர் மறுத்ததுடன் யாழ்ப்பாணத்தில் வந்து விசாரணை மேற்கொள்ளுமாறும் கோரியிருந்தார்.
இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் அவருடன் கலந்து கொண்டிருந்த சக வட மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, தியாகராஜா ஆகியோரும் இன்றைய தினம் அழைக்கப்பட்டு அவர்களிடமும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.