கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேசி ஒரு முடிவெடுப்போம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முக்கியஸ்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மாவட்ட மத்திய குழு உறுப்பினர்களை உள்ளடக்கியதான ஒரு விஷேட கூட்டமொன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடகவிலாளர்களுக்கு விளக்கி கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நகல் எதிர் வரும் ஆவணி மாதம் எமது கைகளுக்கு கிடைக்கும் என நாம் எதிர் பார்க்கின்றோம்.
அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவது நாட்டுக்கு தேவையான ஒன்றாகும். இதனை சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
புதிய அரசியல் சாசனம் அதிகார பகிர்வு உட்பட அதனுடைய வரைவு வரும் வரை நாங்கள் பக்குவமாக நிதானமாக எங்களது காரியத்தை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடினோம்.
அதே போன்று மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப் பட்டோர் தொடர்பான விடயங்கள் மற்றும் வீடமைப்பு மற்றம் புனர்வாழ்வு மற்றும் இதில் ஏற்படுகின்ற தாமதங்கள் குறித்தும் பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையடினோம். புதிய அரசியல் சாசனத்தின் நகல் வரைவு விஷேடமாக அதிகாரப்பகிர்வு தொடர்பான நகல் ஆவணி மாதத்தில் வெளிவரலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது.
அந்த இடைக்கால வரைவு வெளி வந்தவுடன் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தொகுதி ரீதியாக மக்களை சந்தித்து நாங்கள் கலந்துரையடி அது தொடர்பாக முடிவெடுப்போம்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் இவ்வருடம் நடைபெறவேண்டும். ஆனால் தேர்தல் முறைமை சம்பந்தமாக அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.ஒரு கலப்பு முறை தேர்தலாக இருக்கும் தொகுதி ரீதியாகவும் விகிதாசார முறையாகவும் இருக்கும். என்றாலும் மக்கள் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும் புதிய அரசியல் சாசனம் அரசியல் தீர்வு ஏற்படவுள்ள சந்தர்ப்பத்தில் அந்த அரசியல் தீர்வை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை மாகாண சபைகளுக்குண்டு என்றார்.
அடுத்த இரண்டு வருடங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைதச்சர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்க வில்லை. முஸ்லிம் ஒரு வருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதால் தமிழர்கள் அடைந்து கொண்ட நன்மை என்ன என ஒரு ஊடகவிலாளர் கேட்டதற்கு எமக்கு இன்னும் ஓரிரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் நாங்கள் ஆட்சியமைத்திருக்கலாம்.
ஆனால் சில குளறுபடிகள் காரணமாக எங்களுக்கு அந்த ஆசனங்கள் கிடைக்க வில்லை.
இந்த விடயம் தொடர்பில் நாங்கள் பரிசீலிப்போம். நாங்கள் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேசுவோம். எமது மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதும் உறுதிப்படுத்த வேண்டியதும் எமது கடமை. ஆனால் ஒரு பகமையை ஏற்படுத்தாத வகையில் இந்த கருமத்தை ஒரு நிதானமாக செய்ய வேண்டும்.
எல்லோருக்கும் நீதியான தீர்வு கிடைக்க கூடிய வகையில் வழி செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளருமான கே.துரைராஜசிங்கம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சீரீநேசன், மற்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.எம்.நூர்தீன் – vidivelli