படையெடுக்கும் அனைத்து எதிரிகளை எங்கள் ராணுவம் பந்தாடும், இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் : சீன அதிபர்

ராணுவ பலத்தில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துவரும் க்சி ஜின்பிங் முப்படைகளின் தலைமையகமான மத்திய ராணுவ கமிஷன் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.


 
இந்நிலையில், மங்கோலியா அருகே உள்ள சுரீஹே பகுதியில் இன்று சுமார் சுமார் ஒரு லட்சம் வீரர்கள் பங்கேற்ற முப்படை அணிவகுப்பு மற்றும் போர் விமானங்களின் சாகச காட்சிகளை க்சி ஜின்பிங் பார்வையிட்டார். 129 நவீன ரக போர் விமானங்கள் மற்றும் 571 அதிநவீன போர்க் கருவிகளும் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன.

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட க்சி ஜின்பிங் ராணுவ தளபதிகள், உயரதிகாரிகள் மற்றும் வீரர்கள் இடையே பேசினார். அவரது பேச்சின் சுருக்கத்தை சீன தொலைக்காட்சி மற்றும் வானொலி வெளியிட்டது.

இந்நிகழ்ச்சியில் க்சி ஜின்பிங் கூறியதாவது:- 

நம் நாட்டின் மீது படை எடுக்கும் எதிரிகளை தோற்கடிக்கும் நம்பிக்கை மற்றும் திறமையை நம்முடைய கம்பீரமான ராணுவம் பெற்றுள்ளது என்ற நம்பிக்கை எனக்கு பரிபூரணமாக உள்ளது. 

அதேபோல் நமது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சிக்கான நோக்கங்களையும் நமது ராணுவம் பாதுகாக்கும். உலக அமைதியை பாதுகாக்கவும், முகப்பெரிய புத்தாக்கத்துடன் முழு வல்லமை பொருந்திய நாடாக சீனா உருவெடுக்கவும் புதிய அத்தியாயத்தை எழுதும் ஆற்றலும் நம்பிக்கையும் நமது ராணுவத்துக்கு உண்டு. 

போர்க்கலை மற்றும் முப்படைகளின் தரத்தை நாம் மேலும் நவீனமயமாக்க வேண்டும். உலகின் முதல்தர ராணுவத்தை கொண்ட நாடாக சீனா உயர வேண்டும்.

ராணுவ உயரதிகாரிகளும், வீரர்களும் (கம்யூனிஸ்ட்) கட்சியின் அடிப்படை கொள்கையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். கட்சியின் கட்டளைக்கு எந்நேரமும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். கட்சி கைகாட்டும் இடத்தில் வீறுநடைப் போட நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன.

இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்நிலையில், இன்று சீன அதிபர் தெரிவித்துள்ள கருத்து இந்தியாவை சீண்டிப் பார்க்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது