தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்கும் நிலை ஏற்படலாம் என துறைமுக மற்றும் கடற்தொழில்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வேறு மாற்றுவழி இல்லாததால் நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து கொண்டோம். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தனித்தனியாக விருப்பம் கேட்டே அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் இணைந்திருக்காவிடில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கும்.
இதுபோன்ற ஒரு நிலையே டிசம்பரில் உருவாகும். ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை இந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஒன்று கூடி தீர்மானம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் செயற்படும்.
டிசம்பரில் நாம் வெளியேறினால் 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை. அதனடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் புதிய அரசாங்கம் உருவாகலாம்.
அவ்வாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் புதிய அரசாங்கம் உருவாகுமாயின் அவர்கள் நிபந்தனைகளை முன்வைப்பார்கள்.
எனவே அவர்களுடன் இணைந்து ஆட்சியமைப்பது நாட்டில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான முடிவை எடுப்பார் என்று கருதவில்லை” என்று தெரிவித்துள்ளார்.