ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள கூரகல பிரதேசம் பௌத்த புனிதபூமியாகும். பௌத்த தொல்பொருள் பிரதேசமாகும். இங்கு நேரில் சென்று எல்லை வகுப்பதற்கு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முயற்சிப்பது வேடிக்கையானதாகும் என பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூரகலவுக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கூரகல யாருக்குச் சொந்தமானது, அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றி ஆராய அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேரடி விஜயம் மேற்கொள்ள வேண்டியதில்லை.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையொன்று 2002 இல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்குமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தைக் கோருகிறோம். அந்த அறிக்கையிலே உண்மை கூறப்பட்டுள்ளது. இதைவிடுத்து நேரடி விஜயங்களை மேற்கொண்டு காலத்தை வீணடிக்காது கூரகல தொல்பொருள் பிரதேசத்தை அழிவுகளிலிருந்தும் பாதுகாக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கூறிக்கொள்ள விரும்புகிறது.
அமைச்சர் வெறுமனே ஊடகங்களுக்கு கருத்துகள் வெளியிட்டு வருகிறாரே தவிர நடவடிக்கைகளில் இறங்கவில்லை. தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு அவர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறோம் என்றார்.