முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனிவரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடப்போவதில்லை.
ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர்கள் எக்கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அக்கட்சியை ஆரம்பித்தார்களோ அக்கொள்கைக்கு புறம்பாக அக்கட்சி தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு வழங்கினாலும் அதனை அவர் எற்றுக்கொள்ளப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷ்ரம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது தனது தனித்துவத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகிறது. ஆகவே அக்கட்சி பெயரளவில் மாத்திரம் உள்ளது.
மேலும் நாட்டில் தற்போது எப்போதுமில்லாதவாறு மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். ஆனபோதிலும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி தீர்வு முன்வைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தால் முடியாதுள்ளது. டெங்கு, சைட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொருநாளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
எனினும் அதற்கு தீர்வை முன்வைப்பதற்குப் பதிலாக அந்த ஜனநாயகச் செயற்பாடுகளை அரசாங்கம் முடக்குகின்றது.
மக்கள் கஷ்டப்படுகின்றபோதிலும் ஆட்சியாளர்கள் மாத்திரம் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அமைச்சர்களின் வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மறுசீரமைப்பதற்கு கடந்த வாரம் 140 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் மேலோங்கச் செய்து அதன்பால் மக்களின் கவனத்தை திருப்பிவிட்டு அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டுக்குப் பாதகமான சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.