புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர். எனவே புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெஹிஅத்த கண்டிய மகாவலி சாலிகா மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது. அதில் பல உப குழுக்களும் உள்ளன. அவர்கள் தற்போதும் புதிய அரசியலமைப்பிற்கான அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அந்த குழுக்களின் அறிக்கைகளை தொகுத்து அரசாங்கம் தனியான ஒரு அறிக்கையை தயார் செய்யும். அதன் பின்னர் அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் அதற்கு ஆதரவு,எதிர்ப்பு, திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படும்.
அதன் பின்னர்தான் புதிய அரசியலமைப்பின் மொத்த வடிவம் தயார் செய்யப்படும். அதனால் என்னிடத்திலோ அல்லது அரசாங்கத்தில் உள்ளவர்களிடத்திலோ தற்போது வரையில் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான ஒரு விதமான பத்திரங்களும் இல்லை.
அவ்வாறு உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது. பெளத்த மதத்தின் முன்னுரிமைக்கும் எதுவித பங்கமும் ஏற்படுத்தப்படாது. குறிப்பாக பெளத்த மதம் தொடர்பிலான அத்தியாயங்களை மாற்றம் செய்யமாட்டோம்.
எவ்வாறாயினும் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எதிர்பார்ப்புக்கள் உள்ளன. மக்கள் தமது ஒவ்வொரு தொகுதிக்கும் தனியான பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர் என கருதுகின்றார்கள்.
எனவே புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தல் முறைக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.