அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களும், கடன் வசதிகளும்..

ஊடகப்பிரிவு
 
இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய வியாபாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியும் அதற்கு மேலதிகமான பாதிப்புகளுக்குள்ளான வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இரத்தினபுரி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை (27.06.2017) இடம்பெற்ற அனர்த்த நிவாரண மதிப்பீடு தொடர்பான உயர்மட்ட  கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
இரத்தினபுரி பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மற்றும் ஆயத்த நிவாரண பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதற்கு என்னுடன் இணைந்து பணியாற்றும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பாராளுமன்ற உறுபபினர் ஏ.ஏ விஜேதுங்க, மாவட்ட செயலாளர் மாலனி லொக்கு போதாகம, இரத்தினபுரி செயலாளர், அரச அதிகாரிகள், கைத்தொழில் வாத்தக அமைச்சின் கீழான அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் தனியார், மற்றும் அரச சார்பற்ற தொண்டர் அமைப்புகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
அரசாங்கம் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சளவு உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகள் நிர்மாணித்தல், புனரமைத்தல்,பெரியளவிலான வியாபார முயற்சிகள் மற்றும் நடுத்தர பாரிய மீள்கட்டமைப்பு பணிகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தவகையில் ரூபா ஒரு லட்சம் முதல் 20லட்சம் வரையில் இப்பணிகளுக்கான நிவாரணங்களை வழங்கவும் மேலதிக நிதி தேவை என உறுதிப்படுத்தப்படுமிடத்து அவற்றை குறைந்த வட்டி வீதத்தில் கடனாகப் பெற்றுக்கொடுக்கவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். அவசியம் ஏற்படின் கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சின் ஊடாக 8 சதவீகித வட்டியில் கடன்களை பெற்றுக் கொடுக்கவும் முடியும். பாதிக்கப்பட்ட மக்கள் பழைய நிலைக்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை தொடர வேண்டும் என்பதில் ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியுடன் இருக்கின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 54 சமய ஸ்தலங்களுக்கு நிதி உதவியாக தலா 1 லட்சம் ரூபா விகிதம் 54லட்சம் தொகை அடங்கிய காசோலைகளை அமைச்சர் ரிஷாட் உரிய மதகுருமார்களிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் தொழில் பயிற்சி மற்றம் சப்ரகமுவ மாகாண அபிவிருத்தி அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ விஜேதுங்க, மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர்கள், கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சின் அதிகாரிகள், மற்றும் நிறுவனங்கள் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.