புதிய ஆட்சியை கொண்டுவருவதற்கு முழு ஆதரவையும் வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்காமல் கடந்த அரசாங்கத்திலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து வரும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை அரசில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் கூறுவது குறித்து வியப்பாக உள்ளது என்று கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் தொடருமானால் அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறுவோம் என அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக கிழக்கு முதலமைச்சர் அமைச்சர், சம்பிக்க ரணவக்க அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அறிக்கை விடுவது வேடிக்கையாக உள்ளது
கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இனவாதச் செயற்பாடுகளை எதிர்த்தும், மதச் சுதந்திரத்துடன் வாழலாம் எனவும் எதிர்பார்த்தே புதிய ஆட்சி மாற்றத்தினைக் கொண்டுவருவதற்கு முஸ்லிம் மக்கள் பாரிய பங்களிப்பினை வழங்கி இருந்தனர்.
ஆனால் ஆட்சி மாற்றம் எற்பட்ட பின்பும் முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்த எண்ணங்கள் நிறைவேற்றப்படாமல் கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த நிகழ்வுகளை விட அதிகமான சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இழந்த பாரம்பரிய காணிகளில் ஒரு அங்குல காணி கூட இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக உள்ள பூர்வீக காணிகளையும் முஸ்லிம் சமூகம் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவாதச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான அழுத்தங்களை கொடுத்திருக்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த பொதுபலசேனாவை 24 மணித்தியாலத்திற்குள் நாய்க் கூட்டில் அடைப்பது போல் அடைப்போம் எனக் கூறினார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சென்ற பின்பும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற நிகழ்வுகள் ஊடாக இனவாதத்தை பரப்பி நாட்டில் இன உறவுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம், சிங்கள மக்களை உணர்ச்சி ஊட்டி பிரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நமது நாட்டில் ஜனநாயகத்தை கட்டிக்காத்து பல்லின மக்களும் மதச் சுதந்திரத்துடன் வாழும் நிலைமையை ஏற்படுத்துவோம் என உறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளுகளை கட்டுப்படுத்தி நமது நாடு பல்லின மக்களுக்கும் சொந்தமானது என்ற நிலைமையை ஏற்படுத்தி சகல இன மக்களுக்கும் சமத்துவமான பாதுகாப்பை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பில் இருந்து நல்லாட்சி அரசாங்கம் நழுவி விடமுடியாது.
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் பெறும் மூன்று ஆளும் கட்சி அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிரன இனவாதக் கருத்துக்களை பகிரங்கமாகவே பரப்பி வருகின்றனர்.
எனவே, இனவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்தி சட்டத்திற்கு முன் நிறுத்தும் அதே வேளை ஆளும் கட்சியின் அமைச்சரவையில் வகிக்கும் அமைச்சர்கள் மூவரையும் கட்டுப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் உள்ளது. இவர்களை கட்டுப்படுத்தாமல் நமது நாட்டில் இனவாதத்தை ஒழிக்க முடியாது.
நமது நாட்டில் எவ்வாறு கடந்த 30 வருட காலமாக காணப்பட்ட கொடூர யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டதோ, அதேபோன்று இனவாதமும் இந்த நாட்டில் இல்லாமல் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் சகல சமூகங்களும் மகிழ்ச்சியாக வாழும் நிலைமை உருவாக்கப்படும்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் குறித்து அன்று நாம் யதார்த்தங்களை தெரிவித்த போதும் அச்சந்தர்ப்த்தில் ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம் காங்கிரஸ் இன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நடவடிக்கைகளை விமர்சிப்பது குறித்து கவலையடையச் செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.