இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த தண்டனை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருமானத்திலிருந்து 50 சதவீதத்தை அவர் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, இரண்டு முறை லசித் மலிங்க, ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாகவும், ஊடகங்களுக்கு அதிகாரிகளின் அனுமதியின்றி கருத்துத் தெரிவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட்டின் கெளரவ செயலர் மோகன் டி சில்வா, தலைமை செயல் அதிகாரி அஷ்லே டி சில்வா, ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் அசெல ரெகாவா ஆகியோர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு செவ்வாய்க்கிழமை பிற்பகல் விசாரணை நடத்தியது. இலங்கை கிரிக்கெட்டின் தலைமையகத்தில் நடந்த விசாரணையின்போது, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட லசித் மலிங்கா, முறைப்படி மன்னிப்புக் கோரியதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அந்த முடிவு, செவ்வாய்க்கிழமை மாலை கூடிய சிறப்பு செயலாக்கக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தக் குழு, மலிங்காவை, ஓராண்டு இடைநீக்கம் செய்து தண்டனை விதித்தது. ஆனால், அந்த தண்டனை, 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும். அந்த 6 மாதங்களுக்குள் இதேபோன்ற தவறு மீண்டும் நடந்தால், தண்டனை செயல்பாட்டுக்கு வரும்.
மேலும், மலிங்காவின் அடுத்த ஒரு நாள் போட்டிக்கான வருவாயிலிருந்து 50 சதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை அடுத்து, இலங்கை வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கும் தொடருக்கான, தேர்வுக்குழுவில் மலிங்காவின் பெயரும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 30 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் நடக்கும் முதல் இரண்டு ஆட்டங்களுக்கான அணியிலும் மலிங்கா ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.