வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பதவி விலகுவாரா? பதவிவிலக்கப்படுவாரா?

 
பாறுக் ஷிஹான்
 
 வட மாகாண  அவைத்தலைவர்  சீ.வீ.கே.சிவஞானம் பதவி விலகுவாரா அல்லது  பதவிவிலக்கப்படுவாரா என்கின்ற கேள்வி தற்போது வடக்கு அரசியலில் சூடுபிடித்துள்ளது.
 
தற்போதைய முதல்வராக உள்ள சி.வி விக்னேஸ்வரன் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று(19) வெளியிட்டுள்ள கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
இந்த சந்திப்பில் முதல்வர் தனது கருத்தில் பக்கச்சார்பாக நடந்த ஒரு அவைத்தலைவர் தொடர்ந்து அப் பதவியில் இருப்பது என்பது தொடர்பில் கேள்வி எழுகிறது.எனவே வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
 
இதனடிப்படையில் எதிர்வரும் ஜுன் 22 திகதி  வட மாகாண  அவைத்தலைவர்  சீ.வீ.கே.சிவஞானம் பதவி விலகுவாரா அல்லது  பதவிவிலக்கப்படுவாரா என்கின்ற எதிர்ப்பார்ப்பு பலரிடையே ஏற்பட்டுள்ளது.
 
இதே வேளை அவைத்தலைவராக இருந்து வரும் சி.வி.கே சிவஞானம்  தலைமையில் கடந்த ஜுன் 14 ஆம் திகதி இரவு ஆளுநருக்கு தற்போதைய முதல்வர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டு 15 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
அத்துடன் வட மாகாண அவைத்தலைவர்  கடந்த ஜுன்   7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை தொடர்பில்  நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வில்  மிகவும் ஆடம்பர   நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனத்தை    பயன்படுத்தியதை தொடர்பாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
 
இவ்வாறாக  நடுநிலையான இருக்கவேண்டிய   அவைத்தலைவர் என்ற நிலையைத்  தாண்டி   ஆளுநரிடம் முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான பத்திரத்தை தன் கரங்களால் ஆளுனரிடம் கொடுத்திருக்கின்ற நிலையில் தான் அவர்  சீ.வீ.கே.சிவஞானம் பதவி விலகுவாரா அல்லது  பதவிவிலக்கப்படுவாரா என்கின்ற கேள்வி  எழுவதாக  அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடகின்றனர்.