ஹிஜ்ரி மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் நன்மைகளைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. மனிதர்களை நல்வழிப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தித்திக்கும் திருமறை குர்ஆன் விண்ணில் இருந்து இறங்கிய மாதம். “ரமலான் மாதம் எத்தகையது என்றால் அந்த மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியில் தெளிவான அறிவுரைகள் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதுமான குர்ஆன் அருளப்பட்டது” (2:185) என்று திருமறை தெரிவிக்கிறது.
ரமலான் மாதம் வந்து விட்டால் நபிகளார் அதிகளவு வழிபாடுகளில் மிகுந்த அளவு ஈடுபடுவார்கள். முந்தைய மாதமான ஷஅபான் மாதத்திலேயே அதற்குத் தயாராகி விடுவார்கள்.
ஷஅபான் மாதத்தின் இறுதியில் நபிகளார் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது, “மக்களே! மகத்துவம் நிறைந்த ரமலான் மாதம் நெருங்கி விட்டது. இந்த மாதத்தின் ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் நமக்குக் கடமை ஆக்கியுள்ளான். இது பொறுமையின் மாதமாகும். மேலும் இந்த மாதம் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், தேவையுள்ளோர் மீது அனுதாபமும் பரிவும் காட்ட வேண்டிய மாதமாகும்” என்று கூறினார்கள்.
ஐம்பெரும் கடமைகளில் நோன்பைத் தவிர்த்து மற்ற இறைவழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒருவிதத்தில் பகிரங்கமாக அதன் செயல்களைக் கொண்டு அறியப்படும். குனிவது, நிமிர்வது, அமர்வது, சிரம் பணிவது போன்ற உடல் அசைவுகளை வைத்து தொழுகையை அறிந்து கொள்ளலாம். ஒருவர் கொடுக்கிறார்; இன்னொருவர் பெறுகிறார். இதன் மூலம் ‘ஜகாத்’ அறியப்படும். முன்னேற்பாடு, நீண்ட பயணம் இவைகளைக் கொண்டு ‘ஹஜ்’ அறியப்படும். இந்த இறை வணக்கங்கள் மற்றவர்களின் பார்வைக்கு மறையாதவை. நாம் நிறைவேற்றுகிற அந்த நேரம் மற்றவர் களுக்குத் தெரிந்து விடுகிறது. நாம் நிறைவேற்றவில்லை என்றாலும் மற்றவர்களால் அறியப்படுகிறது.
ஆனால் நோன்பு இவற்றுக்கெல்லாம் நேர் எதிரான மாறுபட்ட இறை வணக்கம் ஆகும். ஒருவர் நோன்பு வைத்திருக்கிறாரா இல்லையா என்பது நோன்பாளியையும், இறைவனையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒருவர் எல்லோர் முன்னிலையிலும் ‘சஹர்’ சாப்பிட்டு நோன்பு வைக்கிறார். நோன்பு திறக்கும் வரை வெளியில் தெரியும்படி, உணவருந்தாமலும், பருகாமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அல்லது சாப்பிட்டால் இறைவனைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. இந்த நிலையில் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற இறையச்சமே நோன்புக்கு அடித்தளமாக இருக்கிறது.
நோன்பு என்பது ஓர் அடியான், அல்லாஹ்வுடன் இணைந்த ரகசிய வணக்கமாகும். இறைவனுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் நோன்புக்கு இறைவன் நேரடியாகவே கூலி கொடுப்பான். “எனக்காகவே நோன்பாளி தனது உணவையும், பானத்தையும், ஆசையையும் கைவிடுகிறார். எனவே நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என்று இறைவன் கூறியதாக நபிகளார் நவின்றார்கள்.
புனித ரமலான் மாதத்தில் இறைவழிபாடுகளில் ஈடுபட பெரிதும் ஆர்வம் காட்ட வேண்டும். கடமையான தொழுகைகளைத் தவிர நபில்- உபரித் தொழுகை களையும் தவறாது தொழ வேண்டும். இது மகத்தான நற்பேறுகள் நிறைந்த மாதமாகும்.
“எவர் ரமலான் மாதத்தில் ஒரு கடமையான செயலை நிறைவேற்றினாரோ (அதற்கு) மற்ற மாதங்களில் 70 கடமைகளை நிறைவேற்றுவதற்கான நற்கூலியை இறைவன் வழங்குவான்” என்று நபிகளார் கூறினார்கள்.
நபிமொழிகளில் நோன்பின் நற்கூலி குறித்து மிகவும் அதிகமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
“நோன்பாளிகள் சொர்க்கத்தில் ஒரு சிறப்பான வாசல் வழியே நுழைவார்கள். அதற்கு ‘ரய்யான்’ என்று பெயராகும். நோன்பாளிகள் அதன் வழியே நுழைந்து விட்டால், பிறகு அந்தக் கதவு மூடப்படும். பிறகு அந்த வாயில் கதவு வழியாக எவரும் சுவனத்தில் நுழைய முடியாது”.
“மறுமை நாளில் நோன்பு பரிந்துரை செய்யும்: ‘இறைவா! நான் இந்த மனிதனைப் பகலில் உண்பதில் இருந்தும் பருகுவதில் இருந்தும் மற்ற இன்பங்களில் இருந்தும் தடுத்து வைத்திருந்தேன். இறைவா! இந்த மனிதருக்காக நான் செய்யும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!’. மேலும் இந்தப் பரிந்துரையை இறைவன் ஏற்றுக்கொள்வான்”.
இப்படி நோன்பின் மகத்துவத்தை உணர்த்தும் பல நபிமொழிகள் உள்ளன.
முத்தாய்ப்பாக, “மக்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளை முழுமையாக அறிவார்களேயானால், வாழ்நாள் முழுவதும் ரமலானாகவே இருக்கக் கூடாதா என்று ஏங்குவார்கள்” என்பது நபிமொழியாகும்.