நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து ஞானசார தேரர் மூன்றாவது தடவையாகவும் நீதி மன்றத்துக்கு சமூகம் தருமாறு உத்தரவிடப்பட்டிருந்தும் நீதி மன்றத்துக்கு சமூகம் தரவில்லை. அவர் நீதி மன்றத்துக்கு சமூகமளிக்காததற்கு உடல் நலக் குறைவு மற்றும் உயிர் அச்சுறுத்தல் ஆகிய காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.
அவர் உடல் நலக் குறைவின் காரணமாக நீதி மன்றத்துக்கு சமூகமளிக்காதிருந்தால் அவர் சிகிச்சை பெறும் வைத்தியசாலை உட்பட அனைத்தும் தெளிவாக குறிப்பிட்டிருந்தால் அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதற்கு தேவையான பாதுகாப்பை கோரி வரலாம். இவர் இவ்வாறான நியாயங்களை கூறுவது நீதிமன்றத்துக்கு வராமல் தவிர்ப்பதற்கு என்பது யாவரும் அறிந்த உண்மை.
ஞானசார தேரர் நீதிமன்றத்தை தொடர்ந்து அவமதிக்கின்ற போதும் நீதி மன்றம் இவரை கைது செய்யுமாறு எந்தவிதமான பிடியானைகளையும் பிறப்பிக்கவில்லையென அறிய முடிகிறது. நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்காமல் பொலிசார் யாரையும் கைது செய்ய முடியாது. ஞானசார தேரரை கைது செய்ய எந்தவிதமான பிடியானைகளையும் நீதி மன்றம் பிறப்பிக்கவில்லை என்பதை பொது பல சேனா அமைப்பினர் தங்களுக்கு சாதகமான வாதமாகவும் கொண்டுள்ளனர்.
இவைகளை வைத்து நோக்கும் போது இலங்கை நாட்டில் ஞானசார தேரருக்கென்று விசேட சட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு நாட்டின் நீதித் துறையானது அந் நாட்டை சீரிய முறையில் இயக்குவதில் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் நீதித் துறையை அவமதிப்பதும் நீதித் துறையானது தனது நீதியை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறுகின்றமையும் அந் நாட்டை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் என்பதில் எதுவித சிறு சந்தேகமுமில்லை.
ஞானசார தேரர் விடயத்தில் இலங்கை நாட்டின் நீதித் துறை செயல்படும் விதமானது இலங்கை நாட்டை வீழ்ச்சிப்பாதை நோக்கி கொண்டு செல்வதையே எடுத்துக்காட்டுகிறது.
அ.அஹமட்