வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க லொத்தர் சபை உட்பட சில நிறுவனங்களை தனது அமைச்சுடன் இணைந்து கொண்டமை பொருத்தமற்ற நடவடிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடதுசாரி கட்சிகள் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதே அமைச்சரவை மாற்றத்தின் பிரதான தேவையாக இருந்தது.
எனினும், அவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதும் நிதியமைச்சின் கீழ் இருக்க வேண்டிய லொத்தர் சபை உட்பட சில நிறுவனங்கள் வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை பொருத்தமற்றது.
அமைச்சுகளை வழங்கும் போது தகுதியான நபர்களுக்கு வழங்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினால் அது பொய்யானது.
இந்நிலையில், மங்கள சமரவீர கடந்த காலத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர். ரவி கருணாநாயக்க ஒரு கணக்காய்வாளர்.
கணக்காய்வாளரை விட ஆடை வடிவமைப்பாளர் எப்படி நிதியமைச்சு பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார் என்பது சிக்கலுக்குரியது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.