நல்லாட்சியில் மறை முகமாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

போக்குவரத்து துறையில் ஒழுங்குப்படுத்துதலை மேற்கொள்வது தொடர்பில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சட்டத்தால், தார்மீக ரீதியாக மற்றும் நல்லாட்சியால் இதனை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் இன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியானது மோதிக்கொள்ளும் நிலைமைக்கும் பேருந்துகளை உடைக்கும் வன்முறையான நிலைமைக்கும் மாறியுள்ளது.

பயணிகள் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரங்களை கோரி தினமும் பலர் என்னிடம் வருகின்றனர். அவர்களை நான் திருப்பி அனுப்பி விடுவேன்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 2 ஆயிரத்து 95 ஆவணங்களை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நல்லாட்சியில் இப்படியான பிரச்சினைகள் ஏற்படும். இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நல்லாட்சியில் மறை முகமாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது என என்னிடம் வருபவர்களிடம் நான் கூறுவேன். தவறான முறையில் அனுமதிப் பத்திரங்களை வழங்க முடியாது. 

கேள்வி மனு நடைமுறைக்கு அமையவே அனுமதிப் பத்திரங்களை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.