‘நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்’

புனித ரமலான் மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்கது ‘ரமலான், பொறுமையின் மாதமாகும்’. மனிதன் தன் வாழ்க்கையில் பொறுமையுடன் நடந்துகொண்டால் அதற்கு அவனுக்கு கிடைக்கும் பரிசு சொர்க்கமாகும்.

 

மற்ற காலங்களைவிட இந்த ரமலான் மாதத்தில் ஏழைகள் மீதும், தேவையுள்ளவர்கள் மீதும் அதிகமாக பரிவு காட்டி உதவி செய்யவேண்டும். திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பொறுமையுடன் நடந்துகொள்வதன் அவசியம் குறித்து இறைவன் விளக்குகிறான். மேலும் அவ்வாறு பொறுமையுடன் நடந்துகொள்பவர்களுக்கு கிடைக்கும் கூலி குறித்தும் விளக்கி இருக்கிறான்.

இதுதொடர்பான திருக்குர்ஆன்வசனங்கள் வருமாறு:-

‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்’ (2:153).

‘பொறுமையுடன் இருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப்படுவார்கள்’ (25:75).

‘இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்’ (28:54).

‘(நபியே!) நீர் கூறும்: ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்’ (39:10).

‘மனிதன் (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை)’. (103:2,3). 

பொறுமையைக்கொண்டு நன்மைகளைத் தேடும் காலம் இது. இதை நாம் பயன்படுத்திக் கொண்டு பொறுமையுடன் செயல்பட்டு இறைவனிடத்தில் அதற்குரிய நற்கூலியான சொர்க்கத்தை பெற பாடுபடவேண்டும். எந்த நிலையிலும் நோன்பு காலத்தில் பொறுமையை விட்டுவிடக்கூடாது. எத்தனை துன்பங்களும், நெருக்கடிகளும் வந்தாலும் அதை இறைவனின் திருப்பொருத்தத்திற்காக அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான மன உறுதியை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்புரிவானாக, ஆமீன்.