மூன்று பிரதான தொனிப்பொருள்களின் கீழ் அரசாங்கத்தின் கொள்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்கள அதிகாரிகளின் சந்திப்பில் இன்று உரையாற்றிய அமைச்சர், ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று விடயங்களின் கீழ் அரசாங்கம் பயணிப்பதாக கூறியுள்ளார்.
இன, மத, கட்சி, நிற பேதங்கள் இன்றி இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரச மற்றும் தனியார் துறை ஊடகங்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தில் செயற்பாட்டு ரீதியான ஊடக தொழிற்துறை இருக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சகல இன மக்களின் கருத்துக்களுக்கு செவி கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இனங்களுக்கு இடையிலான பிளவுகள் மூலம் நாடொன்றினால் முன்னோக்கி செல்ல முடியாது. கடந்த 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திரம் பெறும் போது ஆசிய பிராந்தியத்தில் இலங்கை, ஜப்பானுக்கு அடுத்த பொருளாதார பலமிக்க நாடாக விளங்கியது.
கட்சி, இன, மத ரீதியாக சண்டையிட்டு கொண்டதன் காரணமாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தவறிப்போயின. நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய பிரச்சினை 30 ஆண்டு யுத்தமாக மாறியது.
இலங்கை முன்னேற்றமான பொருளாதார அபிவிருத்தியை அடைய வேண்டும். காலம் கடந்து போன கொள்கைகளை கைவிட்டு நவீன உலகத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும்.
ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான யோசனையின் போது இலங்கைக்கான உலகின் முன்னணி நாடுகள் குரல் கொடுத்தன.
இது இலங்கை பெற்ற சர்வதேச வெற்றி. உலக நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தின் பலத்தை நாம் பெற்று கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.