புனிதமான இந்த ரமலான் நாட்களில் இறையச்சத்துடன் நாம் நல்ல அமல்களைச் செய்தால், அதற்கான கூலியை இறைவனிடம் பெற்றுக்கொள்ளலாம். இறையச்சம் இன்றி நம்முடைய மனம் விரும்பியபடி செயல்பட்டு பாவம் செய்தால் மறுமையில் மிகப்பெரிய நஷ்டத்தைத்தான் சந்திக்க நேரிடும்.
ஐம்பது நேரத்தொழுகை, 6 மாதகாலம் நோன்பு என முந்தைய சமுதாயத்திற்கு இறைவன் கட்டளையிட்டிருந்தான். ஆனால் நபி (ஸல்) அவர்களின் வழித்தோன்றலாகிய நமக்கு இறைவன் மிக எளிதான நற்செயல்களையே தந்துள்ளான். இதன்படி நமக்கு தினமும் ஐந்து நேரத்தொழுகையும், ஒரு ஆண்டில் ரமலானில் மட்டும் ஒரு மாத நோன்பும் கடமையாக்கி இருக்கிறான்.
இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘பொறுமையைக்கொண்டும், தொழுகை யைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு பெரும் பாரமாகவே இருக்கும்’. (2:45)
‘நிச்சயமாக யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ, அவர்களின் நற்கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. மேலும், அவர்களுக்கு எந்த பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’. (2:62)
இறைவன் மனித சமுதாயத்திற்கு இலகுவான விஷயங்களையே விரும்புகின்றான். இதையே திருக்குர்ஆன் (2:185), ‘இறைவன் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான், சிரமத்தை விரும்பவில்லை’ என்று குறிப்பிடுகிறது.
ஐந்து நேரத்தொழுகையின் சிறப்புகள் குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
‘(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்து கொள்ளும் தொழுகையாகும். (17:78)
‘தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் ‘மகாமே மஹ்மூத்’ என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம். (17:79)
குறைந்த அளவு அமல்கள் (நற்செயல்கள்) செய்தாலும், நிறைவான பலன்களை இறைவன் நமக்குத்தருகிறான். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அதிகமான அமல்களைச் செய்து அதிக நன்மைகளைப் பெற இந்த ரமலானில் நாம் முயற்சி செய்வோமாக, ஆமீன்.